செய்திகள்

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் படுகொலை : கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கைது

அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜோர்ஜ் பிளைட் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்கட்ட முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்த முன்னிலை சோசலிச கட்சியின் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பெண்கள் உட்பட பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாகவோ அதனை அண்டிய பகுதியிலோ ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று விஷேட தடை உத்தர வொன்றினை பிறப்பித்தார்.

முன்னிலை சோஷலிஷக் கட்சியினர் அமெரிக்க தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதற்கு தடை விதிக்குமறு கோரியும் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீதிமன்றில் முன்வைத்த விஷேட கோரிக்கைக்கு அனுமதியளித்தே நீதிவான் இந்த தடை உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.

இன்று 9 ஆம் திகதி, அமெரிக்க தூதரகம் முன்பாகவோ அல்லது அதனை அண்மித்த பகுதியிலோ ஆர்ப்பாட்டம் நடாத்தக் கூடாது என, முன்னிலை சோஷலிஷக் கட்சியின் செயலாளர்  சேனாதீர குணதிலக மற்றும் பிரச்சார செயலர்  துமிந்த நாகமுவ ஆகியோருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் இந்த தடை உத்தரவானது குறித்த இருவருக்கும் மேலதிகமாக, குறித்த கட்சியினர் மற்றும் பொது மக்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 106 (1), 106 (3) ஆம் அத்தியாயங்களின் கீழ்  பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவினை மீறுவது, தண்டனை சட்டக் கோவையின் 185 ஆவது அத்தியாயத்துக்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாகும் என  பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

sources : virakesari.lk

Back to top button