செய்திகள்

கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்திக் கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, மூடப்பட்ட எல்லைகள் – கனடாவின் நிலை என்ன?

குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்ற வெளிநாட்டு மக்கள் கனடாவுக்குள் நுழைய முடியாது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கக் குடிமக்கள் இதில் விதிவிலக்காகக் கருதப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் விமான நிறுவனங்கள், கொரோனா அறிகுறிகள் உள்ள பயணிகளைக் கனடாவுக்குச் செல்லும் விமானங்களுக்குள் அனுமதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கனடாவின் நிலை

  • மாண்ட்ரியல், டொரோண்டோ, கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் வரும் புதன்கிழமை நாளை முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கனடா தெரிவித்துள்ளது.
  • கனடாவில் 10 மாகாணங்களில் தற்போது வரை மொத்தம் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் 17 பேர்.
  • கனடாவில் தற்போது கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். அதில் மூன்று உயிரிழப்புகள் நேற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு பேரும் பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்.
  • கடந்த வாரம் தனது மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜஸ்டின் ட்ரூடோ தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
  • தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறும், வெளிநாட்டில் இருக்கும் கனடா மக்கள் முடிந்தவரை விரைவில் வீட்டுக்குத் திரும்புமாறும் கடந்த வாரம் கனடா அறிவுறுத்தியிருந்தது. நாட்டுக்குத் திரும்பு அனைத்து கனடா மக்களும் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ்: "குடிமக்களை தவிர யாரும் நாட்டிற்குள் வர முடியாது" - கனடா பிரதமர் ஜஸ்டின்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

வர்த்தக செயல்பாடுகள்

  • கனடாவின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டிருப்பதால் வர்த்தக செயல்பாடுகள் பாதிக்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் அனைத்து வகையிலும் கனடா நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால், இந்த கட்டுப்பாடுகளில் அமெரிக்க மக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக எல்லைகளை மூட வேண்டிய தேவை ஏற்படவில்லை எனக் கனடா தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று கனடாவில் தீவிரமடைந்து வருவதால், எல்லைகளை மூடுவது உட்பட அவரச நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என ட்ரூடோ கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ்படத்தின் காப்புரிமை GETTY IMAGES
  • கனடாவைப் போல பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன. அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயணத்தடையை விதித்துள்ளது.
  • பல கனடா மாகாணங்கள் பள்ளிகளை மூடியுள்ளன. 39 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள க்யூபெக் மாகாணத்தில் பார்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 50 சதவிகித உணவகங்கள் மட்டுமே செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • கனடாவுக்குத் திரும்பி வரும் குடிமக்கள் பலர், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது இல்லை என்ற புகார் எழுந்துள்ளதையடுத்து, மாண்ட்ரியல் அரசு கூடுதல் சுகாதாரத்துறை குழுக்களை விமான நிலையங்களுக்கு அனுப்பியுள்ளது.
  • கனடாவின் பெரிய நகரான டொரோண்டோவில், நள்ளிரவு நேரங்களில்,மதுபான விடுதிகள், உணவகங்கள், உல்லாச விடுதிகள் ஆகியவற்றை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Back to top button