சிறுபான்மையினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவர் – எஸ். பி. திஸாநாயக்க நம்பிக்கை
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ்-முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவு வழங்கவில்லை. ஆனால் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு சிறுபான்மையினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள். நுவரெலியா தேர்தல் தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குகளினால் வெற்றிப் பெறுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பு கூற வேண்டும். அரசியல் ரீதியில் முன்னேற வேண்டும் என்ற சுய நோக்கத்தினால் பழமை வாய்ந்த கட்சியை இவர் இல்லாதொழித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுத்தேர்தலை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள்.
இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவையும் பெறும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் – முஸ்லிம் மகக்ள் ஆதரவு வழங்கவில்லை. ஆனால் ஜனாதிபதி அனைத்து இன மக்களின் தலைவராகவே செயற்படுகிறார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் – முஸ்லிம் மக்களை வேறுப்படுத்தவில்லை.
இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு தமிழ்- முஸ்லிம் மக்கள் பெருமளவான ஆதரவினை வழங்குவார்கள். கொத்மலை தேர்தல் தொகுதியில் 7 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள் இதில் 5000 ஆயிரம் வாக்குகள் பொதுஜன பெரமுன கிடைக்கப் பெறும். அத்துடன் நுவரெலியா தேர்தல் தொகுதியில் 23 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள் இவர்களில் 12 ஆயிரம் வாக்குகள் எமக்கு கிடைக்கப் பெறும்.
தமிழ்- முஸ்லிம் மக்கள் அரசிய்ல் ரீதியில் மாற்றமடைந்து வருகிறார்கள். இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் 13 இலட்ச வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றிடம் பொதுத்தேர்தலில் பூர்த்தி செய்யப்படும். இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் அதி கூடிய வாக்கு வித்தியாசத்தில் என்னால் வெற்றிப்பெற முடியும் என்றார்.