பாலஸ்தீனத்தில் ஐஎஸ் தாக்குதல்?
காஸாவில் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் ஐஎஸ் அமைப்பினர் என சந்தேகிக்கப்படுபவர்கள் முதல் முறையாக மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பாலஸ்தீன பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் சமீபத்தில் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இரு பொலிஸார் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிகாரிகள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மற்றுமொரு சோதனை சாவடியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இந்த தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களை அந்த பகுதியில் அதிகளவில் காணமுடிகின்றது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு ஐஎஸ் உட்பட பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்ற நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.