வல்வெட்டித்துறையில் இராணுவம் சுற்றிவளைப்புத் தேடுதல்
வல்வெட்டித்துறை கெருடாவில் – சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர்.
இதன்போது நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை கொம்மாந்துறையில் கடந்த வாரம் கிணறு ஒன்றிலிருந்து 3 குண்டுகள் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் வல்வெட்டித்துறை கெருடாவில் – சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணிவரை இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
ஊரணி இராணுவ முகாம் படையினரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த இந்தத் தேடுதலில் சுமார் 40 வீடுகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
இதன்போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.