செய்திகள்

அஜித், விஜய் வாக்களிக்க வந்தபோது என்ன நடந்தது? சைக்கிளில் வந்தது ஏன்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய திரை நட்சத்திரங்களான அஜித்தும் விஜயும் வாக்களிக்க வந்த விதம் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேளச்சேரி தொகுதிக்குள்பட்ட திருவான்மியூர் குப்பம் கடற்கரைச் சாலையில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலை 6:40 மணிக்கே தனது மனைவி ஷாலினியுடன் வந்துவிட்டார் அஜித். வாக்குப் பதிவு 7 மணிக்குத்தான் தொடங்கும் என்பதால் வாக்குச் சாவடியின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அஜித் வரப்போகிறார் என்று அறிந்து ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். அவரைப் பார்ப்பதற்காகவும் செல்பி எடுப்பதற்காகவும் ரசிகர்கள் முயற்சித்ததால், சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்துக்குள்ளான அஜித், ரசிகர் ஒருவரின் திறன்பேசியை பிடுங்கினார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் விவாதமானது.

நடிகர் விஜய், வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். சென்னையை அடுத்த நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் அவரது வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அவரது வாக்குச் சாவடி இருக்கிறது. வீட்டில் இருந்து சுமார் 9 மணிக்கு சைக்கிளில் விஜய் புறப்பட்டதும், ஏராளமானோர் அவரை இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர். அவர் வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்களித்த நேரத்துக்குள்ளாக ஏராளமானோர் கூடிவிட்டனர். அதனால் சைக்கிளில் திரும்ப முடியாத விஜய், வேறொருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி வீடு திரும்பினார்.

அஜித் ஷாலினி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாகச் சுட்டிக்காட்டவே விஜய் சைக்கிளில் வந்ததாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் தங்களது முகக்கவசம் மற்றும் சைக்கிளில் உள்ள நிறத்தை குறியீடாக பயன்படுத்தி இந்த தேர்தலில் தங்களது நிலைப்பாட்டை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தன் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு செல்லும் பாதை குறுகலாக இருந்ததாலும், கார் நிறுத்த இடம் இருக்காது என்பதாலும் விஜய் சைக்கிளில் சென்றதாகவும், அதற்கு வேறு பொருள் ஏதுமில்லை என்றும் விஜயின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Back to top button