செய்திகள்

அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்றுவதற்கு சீனா எடுத்த தவறான முடிவு!

நியூயோர்க் ரைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகிய பத்திரிகைகளுக்காக பணியாற்றும் செயதியாளர்களை வெளியேற்றுவதற்கு தீர்மானித்திருக்கும் சீனா, செயற்பாடுகள் பற்றிய விபரங்களை தரவேண்டும் என்றும் அவர்களைக் கேட்டிருக்கிறது.

சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஊடகங்களுக்காக அமெரிக்காவில் பணியாற்றும் சீனச் செய்தியாளர்களின் எண்ணிக்கையை 100 ஆக ட்ரம்ப் நிருவாகம் மட்டுப்படுத்தியதற்கு பின்னரே சீனா இந்த முடிவை எடுத்திருக்கிறது. எல்லைகளைக் கடந்து சுதந்திரமான  தகவல் பாய்ச்சல்கள் இடம்பெறவேண்டியது முன்னரை விடவும் முக்கியமானதாக  இருக்கின்ற ஒரு நேரத்தில், பெய்ஜிங் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை தவறானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகும்.

உண்மையில்,இரு நாடுகளினதும் தீர்மானங்களுக்கு ஒரு பின்னணி இருக்கிறது.அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் அண்மைய வருடங்களாக ஒரு வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன.புவிசார் அரசியல் பதற்றங்களும் வர்த்தகப்போரும் மேலும் குறிப்பாக கொரோனாவைரஸை ( கொவிட் — 19) ” சீன வைரஸ் ” என்று சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்த வர்ணனையும் இதற்கு காரணங்களாகும். அரசியல் ஒழுங்குமுறையிலும் ஒரு முரண்நிலை  இருக்கிறது.மேலும், சுயாதீன ஊடகத்தின் வகிபாகம்  பற்றிய இரு நாடுகளினதும் விளக்கப்பாடுகளிலும் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.

கொவிட் — 19 கொரோனாவைரஸ் பரவலின் விளைவான நெருக்கடியை சீனா கையாளுகின்ற விதம் உட்பட விமர்சன அடிப்படையிலான செய்தி அறிக்கைகளை உள்நோக்கம் கொண்டவை என்று  நோக்கும் சீனா,  சினேகபூர்வமற்றவை அல்லது பகைமையுணர்வைக் கொண்டவை என்று தன்னால் கருதப்படுகின்ற ஊடக தளங்களுக்கும்  செய்தியாளர்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுப்பதில் நாட்டம் காட்டுகிறது.

சீனாவில் ஊடகங்கள்  அரசாங்கத்துடன் இணங்கிப்போகின்றவையாகவும் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுபவையாகவும் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஊடகங்கள் பற்றிய பெய்ஜிங்கின்  அணுகுமுறையைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும்  ஊடகங்கள் செயற்படுகின்ற முறைமை அதுவல்ல. ஜனாதிபதி என்ற வகையில் ட்ரம்ப் செயற்படுகின்ற விதம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன என்பதை பெய்ஜிங் சரியான முறையில் நோக்கினால் அவை எந்தளவுக்கு சுயாதீனமானவையாக இருக்கின்றன என்பதை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எல்லைகளுக்கு அப்பால் அரசாங்கங்களும் தனியாரும் உட்பட சகல தரப்பினரும் ஒன்றுசேர்ந்து பணியாற்றவேண்டிய அவசியம் இருக்கின்ற ஒரு நேரத்தில், தகவல் பரிமாற்றம் முக்கியமானதாக இருக்கின்ற ஒரு நேரத்தில் அவநம்பிக்கை தொடர்ந்தும் ஆழமானதாக இருப்பதையே சீனாவினதும் அமெரிக்காவினதும் தீர்மானங்கள் வெளிக்காட்டுகின்றன. பழைய புவிசார் அரசியல் பதற்றங்கள் இல்லாமல் போகப்போவதில்லை ; உண்மையில் அவை மேலும் மேலும் கசப்பானவையாகவும் ஆழமானவையாகவும் வளரக்கூடும். இது பன்முக அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதலாக அவசியப்படுகின்ற இன்றைய கட்டத்தில் நல்லதல்ல.

( இந்துஸ்தான் ரைம்ஸ் )

Back to top button