செய்திகள்

ஆசிரியர்களுக்கும் பாடசாலை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – கல்வி அமைச்சர்

கொவிட்-19 தடுப்பூசியை ஆசிரியர்களுக்கும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களுக்கும் இம்மாதம் நடுப்பகுதியளவில் வழங்க எதிர்பார்த்துள்ளமையால் கொவிட்-19 வைரஸ் கல்வித்துறைக்கு இனி சவாலாக அமையாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறந்த திட்டமிடலுக்கு அமைய முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் கற்றல் நடவடிக்கைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. 

மேல்மாகாணத்தில் களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்குமான கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியும் என பிரதேச தொடர்பு குழுவினர் யோசனை முன்வைத்துள்ளார்கள்.

களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டம் குறித்து பிரதேச தொடர்பு குழுவினர் முன்வைத்துள்ள யோசனைகளை சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளோம். 

பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்பாளர் அனுமதி வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

ஆசிரியர்களுக்கும், பாடசாலை வெளிக்கள சேவையாளர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இம்மாதத்தின் நடுப்பகுதியில் பாடசாலை சேவையாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் கல்வித்துறைக்கு ஏற்படுத்திய சவால்களை சிறந்த முறையில் வெற்றிக் கொண்டுள்ளோம். 

கொவிட் தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களில் ஆசிரிய சங்கம், சிவில் அமைப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதரசாதரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும். இடம்பெற்று முடிந்த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறு ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும். சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேற்றை  ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Back to top button