இங்கிருந்துதான் ஐரோப்பிய நாடுகளிற்கு வைரஸ் பரவியதா? வெளியாகின்றன புதிய தகவல்கள்
ஆஸ்திரியாவின் பிரபலமான இஸ்கில்Ischgl – சுற்றுலா நகரில் உள்ள மதுபானசாலையிலிருந்தே ஐரோப்பிய -ஸ்கன்டினேவியன் நாடுகளிற்கு கொரோனா வைரஸ் பரவியதா என சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனாவைரசினால் பலர் பாதிக்கப்பட்டமை குறித்து தகவல்களை வெளியிடாதமைக்காக குறிப்பிட்ட மதுபானசாலையின் நிர்வாகிகளை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
அவுஸ்திரியாவின் அல்ப்ஸ் பகுதியில் உள்ள சிறிய நகரமான இஸ்கிலின் பிரபலமான மதுபானசாலை அதன் இரவு வாழ்க்கைக்கும் வருடாந்த இசைநிகழ்வுகளிற்கும் மிகவும் பிரபலமானது.
கிட்ஸ்லொக் என்ற மதுபான விடுதியில் பணியாற்றிய நபர் ஒருவர் பெப்ரவரி இறுதியில் வைரசினால் பாதிக்கப்பட்டார்,ஆனால் நிர்வாகிகள் இது குறித்து தங்களிற்கு தகவல் வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நகரத்திலிருந்து மார்ச் மாதம் தங்கள் நாடுகளிற்கு திரும்பிய ஜேர்மனி நோர்வே டென்மார்க் ஐஸ்லாந்து உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் இந்த நகரத்தினை ஆபத்தானது என பட்டியலிட்டன.
எனினும் இதனை அலட்சியம் செய்த உள்ளுர் அதிகாரிகள் இறுதியாக இந்த நகரை கடந்த வாரம் மூடியுள்ளனர்.
இந்த நகரத்திற்கு சென்று திரும்பிய நான்கு நாட்களில் எனக்கு வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியது எனஎனஹென்ரிக் லெர்வெல்ட் என்பவர் டென்மார்க்கிலிருந்து சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
தன்னுடன் அந்த நகரத்திற்கு வந்த நண்பரும் தொற்றிற்குள்ளாகியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.,இவர்களை போல இந்த நகரத்திற்கு சென்று திரும்பிய நூற்றுக்கணக்கானவர்கள் ஐரோப்பா முழுவதும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
சிஎன்என் தொடர்புகொண்டவேளை கிட்ஸ்லொக் நிர்வாகிகள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர் எனினும் தங்களின் ஊழியர்களிற்கு வேறு ஒருவர் மூலம் நோய் தொற்றியிருக்கலாம் என கிட்ஸ்லொக் அதிகாரியொருவர் ஜேர்மனியின் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட நகரத்திற்கு சென்று திரும்பிய தங்கள் நாட்டின் சுற்றுலாப்பயணிகள் குறிப்பிட்ட நகரிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என அயர்லாந்தின் தலைமை தொற்றுநோய் நிபுணர் அவுஸ்திரிய அதிகாரிகளிற்கு எச்சரித்திருந்தார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
கொபன்ஹேகன் பல்கலைகழகத்தின் தொற்றுநோய்களின் நோய் எதிர்ப்பு குறித்த பேராசிரியர் ஜான் பிரவ்ஸ்கார்ட் அயர்லாந்து குறிப்பிட்ட நகரத்தை ஆபத்தானது என பட்டியலிட்ட உடன் இது குறித்து எச்சரிக்கை அடைந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மதுபான சாலையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக தொடர்புகொள்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ளும்போது மக்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர் என்பதை அறிந்தவுடன் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலை மேற்கொண்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.