இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் நாளை முதல் முடக்கம்
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவெடுத்துள்ளார்
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டமொன்றின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விமான நிலையங்களை மூடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இலங்கை வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையமாகத் திகழும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் இன்று மாலை 3 மணி முதல் இடைநிறுத்தப்படுகின்றன.
பொருட்கள் மற்றும் சேவைகளுடனான விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதியாக திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மூடப்பட்டது.
இந்தியாவிற்கு புனித யாத்திரை சென்றுள்ள 891 பேரை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருகின்றமை தொடர்பிலும் இன்றைய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த யாத்திரைகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை உடனடியாக விமானங்களை அனுப்பி அழைத்து வருமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் 88 ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ரயில் சேவைகள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 28 நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேபோன்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 202 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த சுமார் 1700 பேர் வரை கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு தேசிய நடவடிக்கை மத்திய நிலையம்
கொரோனா தடுப்பு தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தின் பிரதம அதிகாரியாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைகளின் பிரகாரம், ராஜகிரிய பகுதியில் இந்த மத்திய நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து இலங்கை இராணுவம் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.