செய்திகள்

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்தாலும் கூடினாலும் இலங்கையில் மாற்றமில்லை : அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

உலக  சந்தையில் எரிபொருளின் விலை குறைந்தாலும், கூடினாலும் இலங்கையில் எரிபொருளின் தற்போதைய நிர்ணய விலையில்  இவ்வருடம் முழுவதும் எவ்வித மாற்றமும் ஏற்படாது. நெருக்கடியான  நிலையிலும் நிவாரண அடிப்படையிலேயே எரிபொருள் நுகர்வோருக்கு  விநியோகிக்கப்படுகின்றது. என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவில்லை.என  எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள். ஏதாவது ஒரு விடயத்தை  வைத்துக்கொண்டு அதில் அரசியல் இலாபம் தேடுவது ஐக்கிய தேசிய   கட்சியினரது  அரசியல் பழக்கமாகவே மாறிவிட்டன.

கடந்த அரசாங்கம் எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில்  2018ம் ஆண்டு எரிபொருள் விலை நிர்யண சூத்திரத்தை அறிமுகம் செய்தது. இதற்கமைய ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி எரிபொருள் விலையில்   மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

எரிபொருள் விலை மீதான மாற்றம் 10 ரூபாய்க்கு உட்பட்டதாகவே  காணப்பட்டது. மக்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை.

எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தை கொண்டு முன்னாள்  நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியல் பிரச்சாரங்களை செய்தார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து.

முன்னாள் நிதியமைச்சருக்கும், நிதியமைச்சின் செயலாளருக்கும்   எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன.இந்த  வழக்கினை வெகுவிரைவில் நீதியரசர்கள் விசாரணைக்கு எடுத்துக்  கொள்ள வேண்டும்.

2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து இடைக்கால அரசாங்கம் நெருக்கடியான நிலையில் எரிபொருளை நிவாரண விலையிலை வழங்கி வருகின்றது, தற்போது உலக சந்தையில் எரிபொருளின் விலை 25 சதவீதம் தொடக்கம் 35 வீதத்திற்கும் இடையில் குறைவடைந்துள்ளது.

இதன் பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது. அத்துடன் இவ்வருடம் முழுவதும எரிபொருளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

கணியஎண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை மின்சார சபைக்கு  600 பில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடையும் போது அந்த நிதியை சேமித்து    இலங்கை  மின்சார சபை பெற்றுக் கொண்டுள்ள கடனை  செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலக சந்தையில் எரிபொருளின்  விலை  சடுதியாக  அதிகரிக்கும் போது நுகர்வோருக்கு  நெருக்கடி  ஏற்படுத்தாமல் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

Back to top button