செய்திகள்

கொரோனா பரவலும் தற்போதைய நிலையும் – தீர்வுக்கான வழி குறித்து ஜனாதிபதி அதிரடி கருத்து

கொவிட் நோய்த்தொற்றை ஆரம்பத்தில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் பின்னர் ஊடகங்களும் மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டதும் பொறுப்பை தவறவிட்டதும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, நாட்டை முடக்கி வைப்பதால் மாத்திரம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

யாதார்தத்தை புரிந்து கொண்டு நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது ஒவ்வொருவரதும் தனிப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு கொவிட் நோயாளிகளை இனங்கண்டு உரிய சிகிச்சையை வழங்கி முதற் கட்டத்திலேயே குணப்படுத்த மருத்துவர்களுக்கும் பணிக்குழாமினருக்கும் முடியுமாக உள்ளது. எனவே தீவிர சிகிச்சை சேவைகள் தேவையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

எமது நாட்டின் சுகாதாரத் துறையினால் மிக இலகுவாக கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பே தேவை. கொவிட் நோய்த்தொற்று ஒரு சுகாதார பிரச்சனையாகும்.

அதிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது சுகாதார சேவையினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக் கொண்டுள்ள எமது நாட்டின் வைத்தியர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் அதனை செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

நோய்த் தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 03 உள்ளன.

ஒன்று ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது.

இரண்டாவது எதனையும் செய்யாதிருப்பது,

மூன்றாவது நோயை கட்டுப்படுத்தும் அதே நேரம் நாட்டை வழமை போன்று பேணிச் செல்வதாகும். நாம் மூன்றாவது மாற்றுவழியை தெரிவுசெய்திருக்கின்றோம்.

கொவிட் நோயாளிகளை இனங்கண்டு உரிய சிகிச்சையை வழங்கி முதற் கட்டத்திலேயே குணப்படுத்த மருத்துவர்களுக்கும் பணிக்குழாமினருக்கும் முடியுமாக உள்ளது. எனவே தீவிர சிகிச்சை சேவைகள் தேவையில்லை.

நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கும் தொற்றுக்குள்ளாவதை தவிர்ந்திருப்பதற்கும் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்காக பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை மருத்துவர்களின் ஊடாக மக்களிடம் கொண்டு செல்வது ஊடகத் துறையின் முக்கிய பொறுப்பும் கடமையுமாகும்.

ஆரம்பத்தில் கொவிட் நோய்த்தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் பின்னர் ஊடகங்களும் மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டதும் பொறுப்பை தவறவிட்டதும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும். நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது.

யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். சுமார் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த பிரதேசங்களிலும் நாளாந்தம் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இதிலிருந்து தெரியவருவது நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது என்பதாகும்.

இலகுவான விடயம் நாட்டை மூடி வைப்பதாகும். எனினும் மக்கள் வாழ வேண்டும். தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைககளிலும் ஈடுபட்டு பொருளாதாரத்தை பாதுகாப்பது எனது பொறுப்பாகும். பி.சி.ஆர் பரிசோதனைக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 60மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றது. தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் நாளாந்தம் பெருந்தொகை செலவிடப்படுகின்றது.

மக்கள் இந்த நிலைமையை புரிந்துகொண்டு நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும் என்றார்.

Back to top button