கொரோனா வைரஸ்: மே 6 முதல் தமிழ்நாட்டில் விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரமாக அதிகரித்துவருவதால் மே 6ஆம் தேதி முதல் மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. கடைகளை 12 மணியோடு மூடச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாநில சுகாதாரத் துறைச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க. ஸ்டாலினை திங்கட்கிழமையன்று மாலையில் சந்தித்துப் பேசினர்.
இதற்குப் பிறகு கொரோனாவைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி மாதக் கடைசியில் ஒரு நாளைக்கு 450 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்ட நிலை மாறி தற்போது ஒரு நாளைக்கு 20,000க்கும் மேல் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். 23க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்று உறுதியாகும் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
மே 3ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சமாக உயர்ந்துள்ளது. மத்திய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில் கடந்த ஒரு வாரத்தில் 10 சதவீதத்திற்கு மேல் நோய்த் தொற்று அல்லது 60 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ள ஆக்ஸிஜன் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
தமிழக நிலவரத்தை கடந்த 30ஆம் தேதி ஆய்வுசெய்தபோது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நோய்த் தொற்று விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. பல மாவட்டங்களில் ஆக்ஸிஜன் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 60 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மே 6ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 20ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
புதிய கட்டுப்பாடுகள்:
1. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்கலாம்.
2. அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளிலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்யலாம்.
3. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்குக் கடைகள், மளிகைக்கடை
களுக்கு அனுமதி இல்லை. பிற பலசரக்குக் கடைகள், மளிகைக் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்கலாம். இந்தக் கடைகள் தவிர, மற்ற கடைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்றவை வழக்கம் போல செயல்படலாம்.
4. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் 12 மணிவரை செயல்படலாம். உணவகங்கள், தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.
5. எல்லாவிதமான சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்த தடை விதிக்கப்படுகிறது. திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.
6. இறுதிச் சடங்குகள், ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.
7. மாநிலம் முழுவதும் அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.