செய்திகள்

சர்வதேச யோகா தினம்: “யோகா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது” – நரேந்திர மோதி

இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களிடையே இன்று காலை உரையாற்றினார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் உலகின் பல்வேறு நாடுகளிலும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பயிற்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக யோகா தினம் அனுசரிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில், சர்வதேச யோகா தினம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • அனைவருக்கும் 6ஆவது சர்வதேச யோகா தின வாழ்த்துகள்.
  • யோகா நிறம், மதம், இனம் உள்ளிட்ட பாகுபாடுகளை பார்க்காது; மனிதநேயத்தை பலப்படுத்தும்.
  • சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்காக நாளாக இது திகழ்கிறது.
  • இந்த ஆண்டு குடும்பத்துடன் வீட்டில் இருந்தபடி யோகா செய்யுங்கள்.
  • கோவிட்-19 நோய்த்தொற்று சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது. ‘பிரணாயம்’, என்னும் ஒருவகை சுவாசப் பயிற்சி நமது சுவாச மண்டலத்தை வலிமையாக்க மிகவும் உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால், அது நோய்க்கு எதிராக போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கென யோகா பயிற்சிகள் உள்ளன.
  • கொரோனா பரவல் உள்ள நிலையில் யோகாவை கற்றுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
  • யோகாவின் பலன்களை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு நமது நாடும், உலகமும் உணர்ந்துள்ளது.
  • உங்களது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை செய்து பழகுங்கள்.
  • பகவத் கீதையில் கூட யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். கர்மாவுக்கும் யோகாவுக்கு தொடர்புள்ளது. கர்மாவின் செயல்திறன்தான் யோகா.

Back to top button