தந்தையின் உடல் நலம் சீராக உள்ளது ; வதந்திகளை நம்பவேண்டாம் – எஸ்.பி.பி.யின் மகன் சரண் அறிவிப்பு
கோவிட் – 19 வைரஸ் பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவரது உடல்நிலை மிக சிக்கலான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையே, அவரது உடல்நிலை தொடர்பாக அவரது மகன் எஸ்.பி. சரண் விளக்கியுள்ளார்.
“என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேட்டரில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி” என்று எஸ்.பி. சரண் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் மீண்டு வர வேண்டும் என பல்வேறு திரை பிரபலங்களும், பாடகர்களும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் எழுதியுள்ள ட்விட்டர் பதிவில், “எஸ்பிபி அவர்கள் மீண்டுவர அனைத்து இசைப்பிரியர்களும் என்னுடன் சேர்ந்து பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன். அவரது சிறந்த குரலால் நம்மை மகிழ்ச்சியடைய வைத்தவர் எஸ்பிபி” என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ட்வீட் செய்துள்ளார்
பாடகர் எஸ்பிபிக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என நடிகர் தனுஷ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார், பாடகி சாஷா திரிபாதி, சின்மயி நடிகர் பிரசன்னா, விக்ரம் பிரபு, பாலிவுட் திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் எஸ்பி. பாலசுப்பிரமணியம் மீண்டு வர வேண்டுவதாக ட்வீட் செய்துள்ளனர்.
திரைப்பட நடிகர் விவேக், “நம் தேசத்தின் ஆண் குயிலுக்காக உயிர் உருக பிரார்த்திப்போம்” என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
“இந்தியாவில் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரும், தென்னிந்தியாவின் வாழும் சிகரமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், போராட்ட குணம் மிக்க ஒரு சிறந்த மனிதராவார். அவர் நல்ல உடல்நலத்துடன் மீண்டு வரவேண்டும்” என திமுக எம்.பி தயாநிதி மாறன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வர்ணணையாளரான ஹர்ஷா போக்லே எஸ்பிபி விரைவில் மீண்டு வருவார் என நம்புவதாக ட்வீட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான அஷ்வினும் பாடகர் எஸ்பிபி நல்ல உடல்நலத்துடன் மீண்டு வர பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.