தமிழர் வரலாறு பற்றி புதிய செய்திகள்: சங்ககால சோழர் நாணயத்தில் மனித உருவம்
தமிழர் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யும் வகையில், கீழடியில் அகழாய்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருப்பதைப் போலவே, வேறு பல வடிவங்களிலும் வரலாற்று ஆய்வுகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளாக கல்வெட்டு மற்றும் நாணய ஆய்வுகள் உள்ளன.
நாணயவியல் துறையில், சங்ககால சோழர் நாணயத்தில் முதல் முறையாக ஒரு மனித உருவம் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை பேசுகிறது.
கி.மு. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி.1867ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும் தங்கள் நாணயங்களை வெளியிட்டு உள்ளனர். இவற்றில் கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தில் தமிழகத்தில் புழங்கிய நாணயங்கள் ‘சங்க காலத் தமிழகக் காசுகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இந்த நாணயங்கள் பெரும்பாலும் செம்பினால் செய்யப்பட்டவை, சதுர வடிவானவை. அரிதாக வெள்ளி நாணயங்களும், வட்ட வடிவ நாணயங்களும் கிடைப்பது உண்டு. வட்ட வடிவ நாணயங்கள் கி.பி. 1-3ஆம் நூற்றாண்டில் வெளியான பிற்பகுதி சங்க கால நாணயங்களாக கருதப்படுகின்றன.
இந்த சங்க கால நாணயங்களில், சங்க கால சேரர்கள் வெளியிட்ட நாணயங்கள், சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்கள், சங்க கால சோழர்கள் வெளியிட்ட நாணயங்கள், மலையமான் என்ற குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள், அதிரன் எதிரான் சேந்தன் என்ற ஒரு குறிப்பிட்ட குறுநில மன்னன் வெளியிட்ட நாணயங்கள் என்று மொத்தம் 5 வகையான நாணயங்கள் கிடைத்துள்ளன.
இந்த நாணயங்களில் எப்போதும் ஒரு பக்கத்தில் இவற்றை வெளியிட்ட அரசுகளின் ஆட்சிச் சின்னமே காணப்படும், அதாவது சோழர் காசுகளில் புலி, பாண்டியர் காசுகளில் மீன், சேரர் காசுகளில் வில் ஆகியவை காணப்படும். மறு பக்கத்தில்தான் பிற சின்னங்கள் காணப்படும்.
இப்படியாக சங்க காலக் காசுகளில், மறு பக்கத்தில் பொறிக்கப்படும் சின்னங்களில் பிரதானமாக உள்ள ஒரு சின்னம் யானை. இதுவரை கிடைத்த சங்க கால காசுகளில் மூவேந்தர்கள் அனைவருமே யானையையே அதிகம் பொறித்து உள்ளனர். இந்த யானைகள் தனியாகவோ குதிரை, மங்கலச் சின்னங்கள், காவல் மரம் போன்றவைகளுடன் சேர்ந்தோ காணப்படுகின்றன.
சங்ககாலச் சோழர் நாணயங்களில் காணப்படும் யானை பட்டத்து யானையா, கோவில் யானையா? – என்ற கேள்வி நெடுங்காலமாக உள்ளது.
அத்தோடு, சில சங்க கால சேரர் காசுகளில் நிற்கும் மனித உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் சோழர் காசுகளில் மட்டும் மனித உருவமே இல்லை? – என்ற கேள்வியும் விடை காணப்படாமல் இருந்தது. இந்தக் கேள்விகளுக்கான விடையாகவே சோழர் காசுகளில் நிற்கும் மனித உருவம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தெளிவற்ற செங்குத்தான உருவம் உள்ள சில காசுகளை கண்டறிந்தேன்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவுக்கு தெளிவான உருவம் உள்ள நாணயம் ஒன்று எனக்குக் கிடைத்தது, இதில் யானையின் மீது வெண்கொற்றக் குடையும் குடைக்குக் கீழே ஸ்ரீவத்ஸ சின்னமும் இருந்தன.
யானைக்குப் பின்னே மனித உருவம் போன்ற ஒரு உருவம் காணப்பட்டது, ஆனால் இந்த உருவம் முழுதும் தெளிவாக இல்லை., இதனால் என் தேடல் தொடர்ந்தது. இந்தத் தேடலில், தெளிவில்லாத மனித உருவத்தோடு சுமார் 5 நாணயங்கள் கிடைத்தன.
இந்த நிலையிலதான் தஞ்சாவூரைச் சேர்ந்த நாணய விற்பனையாளரான சையது மீரான் என்பவரிடம், இதே வகையைச் சேர்ந்த ஒரு தெளிவான காசு இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்து, சமீபத்தில் அந்த நாணயத்தை வாங்கினேன்.
இந்தத் தெளிவான நாணயத்தால், ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சங்ககாலச் சோழர் காசுகளில், யானைக்குப் பின்புறம் நிற்கும் மனித உருவம் ஒன்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த மனித உருவம் தன்னுடைய கைகளை மேல தூக்கி வணங்கிய நிலையில இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் அந்த மனித உருவத்துக்கு முன்னே உள்ள யானை ஒரு கோயில் யானையாகவோ, வழிபாட்டுக்கு உரிய யானையாகவோ இருக்குமோ என்ற ஐயம் தோன்றுகிறது.
இதற்கு முன்பு சேகரித்த இதே வகையான ஒரு நாணயத்தில் யானைக்கு மேலே ஒரு குடைக்குக் கீழே ஸ்ரீவத்சம் சின்னமும் தெளிவாக இருந்தது என்று பார்த்தோம், இந்தக் கண்டுபிடிப்பும் அந்தக் குறிப்பிட்ட யானை கோவில் யானையோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
ஆனால் இந்த யானை எந்த மதத்து மக்களால் வழிபடப்பட்டது என்பதையோ, சங்க காலத்தில் நடந்த ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை அது நினைவுபடுத்துகிறதா என்பதையோ இப்போது நம்மால் அறிய இயலவில்லை.
அது போலவே யானையின் பின்னே நிற்பவர் சாதாரண குடிமகனா, பாகனா, அரசரா, ஏன் அவர் வணங்கிய நிலையில் உள்ளார்? – என்ற கேள்விகளும் விடை காணப்பட வேண்டியதாய் உள்ளன. சங்க இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளை இந்த நாணயத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, எதிர்காலத்தில் இன்னும் துல்லியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதற்கு முன்னர் சோழர்களின் ஒருவகை சங்க கால நாணயத்தில் மட்டும்தான் அதில் இருந்தது பட்டத்து யானை என்று உறுதி செய்ய முடிந்தது. அந்தக் காசு சோழர்கள் தங்கள் தலை நகரத்தைத் தேடி பட்டத்து யானையில் போகும்போது, அந்தப் பட்டத்து யானையை ஒரு கோழி கொத்திக் கொன்ற வரலாற்றோடு தொடர்புடையது. (இந்த வரலாற்றால்தான் சோழர்களின் தலை நகரம் கோழியூர் எனப் பெயர் பெற்றது) இப்போது சோழர் காசுகளில் பட்டத்து யானையோடு கோவில் யானையும் இருந்திருக்கலாம் என்ற முடிவை புதிய நாணயம் அளிக்கிறது.
இதுவரை சோழர்கால நாணயத்தில் காணப்பட்ட யானைகளை சங்க கால அரசர்களின் படை பலத்துக்கான குறியீடாக மட்டுமே ஆய்வாளர்கள் கருதி வந்தனர்.
ஆனால் அந்த யானைகள் சங்க கால பக்தியின் குறியீடாக இருக்குமோ என்ற ஐயத்தை இந்த கும்பிடும் நிலையில் உள்ள மனித உருவம் எழுப்பி உள்ளது.
Source BBC