நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால், தயாரிக்கப்பட்டுள்ள 5 இலட்சம் AstraZeneca COVISHIELD தடுப்பூசிகள் இன்று (28) முற்பகல் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன.
இந்தியா இந்த தடுப்பூசிகளை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளது.
AstraZeneca COVISHIELD தடுப்பூசிகளை 250,000 பேருக்கு வழங்க முடியும் என இலங்கைக்கு கொவிட் தடுப்பூசியை கொண்டுவருவது தொடர்பான குழுவின் தலைவர் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
நாளை (29) முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கொழும்பை அண்மித்த 6 பிரதான வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம், டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாளொன்றுக்குள் வைத்தியசாலையின் நான்கில் ஒரு வீதமானோருக்கு தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
கொழும்பு வடக்கு வைத்தியசாலை
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை
முல்லேரியா வைத்தியசாலை
தேசிய தொற்று நோயியல் பிரிவு
ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகிய 6 வைத்தியசாலைகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாளை (29) முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த நாட்களின் எண்ணிக்கை சில சந்தர்ப்பங்களில் 5 ஆகவும் அதிகரிக்கும் பட்சத்தில் இதற்கு இணையாக ஏனைய வைத்தியசாலைகளிலும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என வைத்தியர் இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை, ஏனைய மாகாணங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் நாளை (29) இணையவழியாக கலந்துரையாடப்பவுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம், டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரசேதத்திலுள்ள ஏனைய முக்கிய அதிகாரிகளுக்கு இதன்போது அடிப்படை ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் இதற்கு தேவையான ஏனைய நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாளை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் தேவையான ஆலோசனைகளை வழங்கி, தடுப்பூசிகளை வழங்குவது குறித்த திகதி தீர்மானிக்கப்படும் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.
COVID – 19 தடுப்பூசி தொடர்பாக நாட்டு மக்களின் அணுகுமுறையை கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம், கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை 57.4 ஆக காணப்படுகின்றது.
இவர்களில் 37 வீதமானோர் கொரோனா தடுப்பூசி பெறுவது நிச்சயமற்றது என தெரிவித்துள்ளனர்.
8 வீதமானோர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில்லை என தெரிவித்துள்ளனர்.