நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி….!
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 739 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அதில் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியில் மாத்திரம் 729 பேர் அடங்கியுள்ளனர்.
அத்துடன் நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் உள்ள 10 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 832 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுநாள் வரையில், நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 நோயாளர்கள் மினுவாங்கொடை கொத்தணியில் அடையாளங் காணப்பட்டனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியாகி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 973 ஆக காணப்படுகிறது.
அதேநேரம் கொவிட் 19 தொற்றிலிருந்து நேற்று 7 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மினுவங்கொடை கொத்தணியில் கொவிட-19; தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங் காண்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் நேற்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, கம்பளை – புபரஸ்ஸ நிவ் பொரஸ்ட் தோட்;டத்திலுள்ள வீடொன்றுக்கு கடந்த இரண்டாம் திகதி மினுவாங்கொடை தொழிற்சாலையின் பணியாளர்கள் சென்றிருந்தனர்.
அதில் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளதுடன் அவர் கண்டி பொதுமருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றைய பெண்ணுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவரை சுயதனிமைப்படுத்துமாறு மருத்துவ தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்
இதேவேளை, மாத்தளை பல்லேபொல – எஹலேபொல பகுதியை சேர்ந்த மினுவாங்கொடை ப்ரென்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையின் முகாமையாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மினுவாங்கொடை – ப்ரென்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஹொரணையை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக நாகொடை மருத்துவமனையில் மேற்கொள்ளப்ப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தமர களுபோவில இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த தொற்றாளர் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மனைவி ஹொரணை ஆதார மருத்துவமனையில் தாதியாக சேவையாற்றியுள்ளதுடன் அவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் பணியாற்றிய ஹொரணை ஆதார மருத்துவமனையின் ஐந்தாம் இலக்க அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் இந்திக தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த 27 ஆம் திகதியின் பின்னர் தமது கணவனை சந்திக்கவில்லை என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
எனினும் பாதுகாப்பு ஏற்பாடாக பீ.சீ.ஆர் பரிசோனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.