“பண மதிப்பு உயர்வால்தான் தமிழக அரசின் கடனும் உயர்ந்தது” – எடப்பாடி பழனிசாமி
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை – “தமிழக அரசின் கடன் 4.5 லட்சம் கோடி ரூபாய்“
தமிழக அரசின் ரூ.4.5 லட்சம் கோடி ரூபாய் கடனை சமாளிக்கும் நிலை திமுகவுக்கு வராது. எனவே, இதுகுறித்து திமுக கவலைப்பட வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவையில் பேரவையில் முதல்வர் பழனிசாமி
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கடந்த 2011-ம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் படிக்கும்போது, “ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று, ரூ.4.5 லட்சம் கோடிக்கு கொண்டுவந்து விட்டுள்ளீர்கள். எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால், ரூ.4.5 லட்சம் கோடி ரூபாய் எங்கள் தலைவர் எப்படி அடுத்தமுறை சமாளிக்கப் போகிறார்,” என்று கேட்டார்.
அப்போது “அப்படிப்பட்ட நிலைமை வராது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அன்று ரூ.1 லட்சம் கோடி என்பது, இன்றைய ரூ. 4.5 லட்சம் கோடிக்கு சமம். 10 ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு உயர்வால் இன்று ரூ.4.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது,” என்று கூறினார் பழனிசாமி.

தினமணி: காவிரி வேளாண் மண்டலம்: அமைச்சரவை ஒப்புதல்
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக்க தமிழக அமைச்சரவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
“இதையடுத்து, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு அன்றைய தினமே நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, சட்டப் பேரவையில் இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வேளாண் மண்டல விவகாரத்தில் சட்டப்பேரவை மூலமாக அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், இந்த விஷயத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அரசின் அறிவிப்பு அமையும் எனவும் அவா் அறிவித்தாா்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கூடியது. சுமாா் ஒரு மணி நேரம் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டல சட்ட மசோதா தொடா்பாக விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் பங்கேற்றனா்” என்று தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: “யாழ்பாணம் – புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து”

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை இலங்கை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வருதை தந்தார். பின்னா் செய்தியாளா்களிடம் சந்தித்து மத்திய இலங்கை அமைச்சர் மன்சுக் மாண்டியா கூறியதாவது:-
இந்தியா – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.