Tech Zoneசெய்திகள்

சுந்தர் பிச்சை: யார் இவர்? – தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை.

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2015ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை தற்போது கூடுதலாக ஆல்ஃபபெட்டையும் கவனித்து கொள்வார்.

சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட அவர், கரக்பூரிலுள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் சென்றார்.

அங்கு எம்.எஸ் பட்டம் பெற்ற பின்னர், உலகப் புகழ்பெற்ற வார்ட்டன் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

எங்கு பிறந்தார்?

சென்னையில் பிறந்தவரான அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியவர் அவர்.

சுந்தர் பிச்சைபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

பிராந்தியங்களுக்கிடையிலான போட்டிகள் பலவற்றில் அவரது அணி வெற்றிபெற்றிருக்கிறது.

பள்ளிக்காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.

சுந்தர் பிச்சையின் குடும்பம்

இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை. ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்திவந்தார்.

ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றிய சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அன்று தன் வேலையில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மகன்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

என்ன படித்தார்?

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகப் பொறியியல் படிப்பை முடித்தார் சுந்தர் பிச்சை.

அதற்குப் பிறகு, உதவித் தொகையுடன் அமெரிக்க ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைத்தது.

அக்காலப்பகுதியில் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கட்டின் கட்டணம் சுந்தர் பிச்சையின் தந்தையின் ஒரு வருட சம்பளத்திற்கும் அதிகமானதாக இருந்தது.

சுந்தர் பிச்சைபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

கூகுளில் சுந்தர்பிச்சையின் பங்களிப்பு என்ன?

2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.

கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்து வந்தனர். தொடர்ந்து, 2015ல் அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றார்.

அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

சுந்தர் பிச்சைபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

சுந்தர் பிச்சையின் ஊதியம் என்ன?

கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரி ஆவார். 2015ல் அவர் கூகுளின் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், தன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார்.

அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டின.

இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்தது.

12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் என்ன?

சுந்தர் பிச்சைபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

கூகுளின் தலைமை அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சென்னை வந்திருந்த அவர், ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் எடுத்தீர்கள் என்று மாணவர்கள் கேட்டதற்கு ஸ்ரீராம் கல்லூரியில் சேருவதற்கு போதுமான அளவில் கூட மதிப்பெண்களை நான் எடுக்கவில்லை என்று நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.

காதல் திருமணம்

சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும்போது அஞ்சலியை சந்தித்தார். அஞ்சலி அவரின் வகுப்பில் படித்தவர்.

இவர்களின் திருமணம் காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுந்தர்பிச்சை பேச்சு

ஒருமுறை மாணவர்கள் எதிர்காலத்தை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து பேசும்போது, “யார் என்ன பாதையை வேண்டும் என்றாலும் தேர்வு செய்யலாம் ஆனால் நமது கனவு மற்றும் மனது என்ன சொல்கிறது என்பதை பின்பற்ற வேண்டும். அதுதான் முக்கியம். நீங்கள் துணிந்து செயல்படுவது உங்களுக்கு உடனடியாக பலனளிக்காமல் இருக்கலாம் ஆனால் காலம் செல்ல செல்ல உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்,” என்று தெரிவித்திருந்தார்.

Sources : – BBC

Back to top button