செய்திகள்

பல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்

நாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதே வேளை கொழும்பில் மேலும் இரு பகுதிகள் இன்று காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்படுவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய 6 மாவட்டங்களிலும் 14 பொலிஸ் பிரிவுகளும் , 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , இரு தொடர் மாடி குடியிருப்புக்களும் மேலுமொரு பிரதேசம் என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு

கொழும்பில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் மட்டக்குளி, புறக்கோட்டை மற்றும் கரையோர பொலிஸ் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

கொழும்பில் முகத்துவாரம், புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் பொரளை பொலிஸ் பிரிவில் வானாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

இன்று திங்கட்கிழமை காலை 5  மணிமுதல் மட்டக்குளி பொலிஸ் பிரிவில் ரன்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் பேர்கசன் வீதியில் தெற்கு பிரதேசம் என்பனவும் , வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் லக்சந்த செவன குடியிருப்பு, சாலமுல் மற்றும் விஜயபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா

கம்பஹாவில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள், கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மற்றும் ராகம ஆகிய பிரதேசங்கள் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

கம்பஹாவில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

கம்பஹாவில் வத்தளை, பேலியகொடை மற்றும் களனி ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாகவே காணப்படும் என இராணுவத்தளதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவ்வாறான பிரதேசங்கள் தொடர்பில் கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கமைய,

களுத்துறை

களுத்துறை மாவட்டத்தில் அட்டலுகம கிழக்கு , எபிடமுல்ல மற்றும் கொல மெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாகவுள்ளன.

கண்டி

இதே போன்று கண்டி மாவட்டத்தில் புளுகஹதென்ன மற்றும் தெலம்புகஹவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

புத்தளம்

புத்தளத்தில் வெரலபட, வெரலபட தெற்கு, வெரலபட வடக்கு, எகொடவத்த மற்றும் குருசபதுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைபற்று பொலிஸ் பிரிவு உள்ளுராட்சி மன்றத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Back to top button