செய்திகள்

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பரிசீலனை

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வியமைச்சு இந்தவாரம் முக்கிய கூட்டத்தை நடத்தவுள்ளது.

மேல் மாகாணம், குருணாகல் நகரம், குலியாபிட்டி மற்றும் எஹெலியகொட பொலிஸ் பகுதிகளுக்கு நவம்பர் 09 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதியை கல்வி அமைச்சு இந்த கூட்டத்தில் மறு பரிசீலனை செய்யவுள்ளது.

கல்வி அமைச்சகம், சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான கொவிட்-19 ஒழிப்பு செயலணி ஆகியவற்றுக்கு இடையே நடைபெறவுள்ள கூட்டத்தை தொடர்ந்து மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி மறுபரிசீலனை செய்யப்படும்.

கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளைத் தொடர்ந்து, மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகளை நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் திறக்க முன்னர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந் நிலையில் நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் திறக்கப்படுவதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Back to top button