பாடசாலைகள் ஆரம்பிப்பிப்பது தொடர்பில் இன்னும் இரு வாரங்களில் தீர்மானம்!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு என்பவற்றை திறப்பது தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.
தற்போது பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.
நாட்டின் பொருத்தமான மாகாணங்களில் சுகாதார வழிமுறைகளுக்கமைய முன்பள்ளி பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் செயற்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இந்தமாத இறுதிக்குள் முன்பள்ளி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தினத்தை அறிவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை மீள ஆரம்பிப்பதற்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
தரம் ஒன்று முதல் 5 வரையில் வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை தொடர்ந்தும் குறைவடைந்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதேவேளை கண்டி மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளில் இன்று 42 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய 3 பாடசாலைகளிலும் கற்றல் நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 16 சதவீதமாக காணப்பட்டதாக கண்டி கல்வி வலயத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.