செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனாவில் குறையும் மரணங்கள், ஜப்பான் கப்பலில் இருவர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையமாக விளங்கும் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில், கடந்த மூன்று வார காலத்தில் இல்லாத அளவுக்கு, புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (புதன்கிழமை) குறைந்துள்ளது.

ஹூபேய் மாகாணத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனாவால் புதிதாக 1,693 பேர் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை திடீரென மிகவும் குறைந்து நேற்று (புதன்கிழமை) வெறும் 349 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இது கடந்த ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து இதுவரையிலான காலத்தில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

சொகுசு கப்பலில் மரணங்கள்

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால், ஜப்பான் துறைமுகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருந்த இரு பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான் குடிமக்களான இவர்கள் இருவரும் 80 வயதைக் கடந்தவர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

அதே சூழ்நிலையில், புதன்கிழமை மட்டும் சீனாவில் கொரோனா பாதிப்பினால் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், சீனாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,121ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 74,600க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“சீனாவிலும், மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இதன் தாக்கம் வேறு வகையில் உள்ளது” என்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 621 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. சீன பெருநிலப் பரப்புக்கு வெளியே ஒரே இடத்தில் அதிகம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது இங்குதான்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் முதல் முறையாக அந்த கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விவகாரத்தை ஜப்பான் சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய முக்கிய தகவல்கள்

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?
படத்தின் காப்புரிமை GETTY IMAGES
  • சீனாவை கொரோனா வைரஸ் தாக்கியத்திலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் மிகப் பெரிய ஆய்வு ஒன்றின் முடிவுகளை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதன்படி, கொரோனா பாதிப்புள்ள 44,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் ஒப்பீட்டளவில் வயதானவர்களே உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
  • சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80% பேர் லேசான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது. வயது முதிர்ந்தவர்களை போன்றே, கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களும் மிகப் பெரிய அச்சுறுத்தலில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையமாக விளங்கும் ஹூபேய் மாகாணத்தில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ள நிலையில், அது சீனா முழுவதும் 0.4% என்ற அளவிலேயே உள்ளதாக சீன அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு, பின்னர் உறுதிசெய்யப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வயது முதிர்வு, நோயெதிர்ப்பு அமைப்பு குறைபாடு உள்ளிட்டவற்றின் காரணமாக இவர்கள் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இரான் குடிமக்களான இவர்கள் இருவரும் சமீபத்தில் வெளிநாட்டிற்கோ அல்லது பக்கத்து மாகாணத்திற்கோகூட செல்லவில்லை என்று அந்நாட்டின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
  • மற்ற மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை, அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் சீனாவை சேர்ந்தவர்கள்.முன்னதாக, எகிப்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் முற்றிலும் குணமடைந்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?
படத்தின் காப்புரிமை GETTY IMAGES
  • கொரோனா வைரஸை சீனா எதிர்கொள்ளும் விதம் குறித்து விமர்சித்து கட்டுரை வெளியிட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் மூன்று வெளிநாட்டு செய்தியாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ‘இனவெறியை’ பரப்பும் வகையிலான செய்தியை வெளியிட்டதாக கூறி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியதாகவும், ஆனால், பத்திரிகை நிர்வாகம் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.
  • சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ கண்டனம் தெரிவித்துள்ளார். “சரியான எதிர் வாதங்களை முன்வைக்கலாம். ஆனால், பேச்சுரிமையைக் கட்டுப்படுத்து சரி அல்ல” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Back to top button