செய்திகள்

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை

மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ரத்தம் தோய்ந்த நாள் என்று வருணித்துள்ளது ஐ.நா.

மியான்மரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளியாவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார்.

பாதுகாப்புப் படையினர், ரப்பர் குண்டுகள் மற்றும் உண்மையான குண்டுகளால் சுட்டனர் என்று சாட்சிகள் கூறுகின்றன.

பிப்ரவரி 1-ம் தேதி மியான்மரில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம். அதுமுதல் மியான்மர் முழுவதும் ஒத்துழையாமை இயக்கமும், வெகுமக்கள் போராட்டமும் நடந்துவருகிறது.

ராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள். ராணுவக் கிளர்ச்சி நடந்தபோது இந்த தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டு அவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.

கேடயம் தாங்கிய போலீசுக்கு எதிராக, தாற்காலிகத் தடுப்பரன்களைப் பயன்படுத்தி சாலையில் நிலை கொண்டுள்ள போராட்டக்காரர்கள். மியான்மர், மார்ச் 3-ம் தேதி.
படக்குறிப்பு,நிராயுதபாணிகளுக்கு எதிராக அணி வகுக்கும் ஆயுதங்கள்.

இந்த ராணுவக் கிளர்ச்சியும், அதைத் தொடர்ந்து போராட்டங்கள் பலவந்தமாக ஒடுக்கப்பட்டதும் சர்வதேசக் கண்டனங்களுக்கு உள்ளாயின. ஆனால், இவற்றை மியான்மர் ராணுவம் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

புதன்கிழமை நடந்த இறப்புகளைப் பார்த்த பிறகு, ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்த அழைப்பு விடுத்துள்ளது பிரிட்டன். மியான்மர் ராணுவத்துக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி யோசித்துவருவதாகத் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

ராணுவம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ளவேண்டும் என்று மியான்மரின் அண்டை நாடுகள் கேட்டுக்கொண்டதற்கு மறுநாள் இப்படிப் போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கை செய்யாமல் சுட்ட பாதுகாப்புப் படை

கிளர்ச்சி நடந்ததில் இருந்து இதுவரை குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஷ்ரானர் தெரிவித்துள்ளார்.

நிராயுதபாணியான தன்னார்வ மருத்துவப் பணியாளர் ஒருவரை போலீஸ் அடிப்பது ஒரு காணொளியில் தெரிகிறது என்றும், ஒரு போராட்டக்காரர் தெருவிலேயே சுடப்படுவதை மற்றொரு காணொளி காட்டுகிறது, அந்தப் போராட்டக்காரர் இறந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தெளிவாகத் தெரியாவிட்டாலும், 9 mm அரை இயந்திரத் துப்பாக்கிகளை போலீஸ் பயன்படுத்தியிருக்கலாம் என்பது தெரிவதாக ஆயுத வல்லுநர்கள் கூறியதாகவும் ஷ்ரானர் தெரிவித்தார்.

யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மியான்மரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களில் 14 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு பையன்களும் அடக்கம் என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. 19 வயது பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் தடுப்பரண்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
படக்குறிப்பு,நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் இப்படித் தடுப்பரண்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

“எங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கவோ, கலைந்து போவதற்கான வேறு எச்சரிக்கைகளை விடுக்கவோ இல்லை. அப்படியே துப்பாக்கியை எடுத்தார்கள். சுட்டார்கள்” என்று மொனிவா நகரப் போராட்டக்காரர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

மண்டாலேவில் போலீசாரும், சிப்பாய்களும், போராட்டக்காரர்களை எச்சரிக்கை ஏதும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ஒரு மாணவப் போராட்டக்காரர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் தங்கள் வீட்டுக்கு அருகே காலை சுமார் 10 அல்லது 10.30 மணி அளவில் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிரிழப்புகள் குறித்து ராணுவம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அழுத்தத்தை மீறி பிடிவாதம் காட்டும் ராணுவம்

மியான்மர் சிக்கலை உலக நாடுகள் பதற்றத்தோடு கவனித்துவரும் நிலையில், தடைகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது ராணுவம்.

ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளார் ஷ்ரானர் பர்ஜனர்.

இத்தகைய தண்டனைகள் வரும் என்று மியான்மர் ராணுவத் துணைத் தலைவர் ஒருவருடன் பேசும்போது எச்சரித்தார் ஷ்ரானர்.

வெகுசில நண்பர்களோடு நடைபோடுவதற்கு நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்று அவர் இதற்குப் பதில் கூறியதாக நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறினார் ஷ்ரானர்.

எனினும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மேலும் அதிக தடைகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளன.

போலீஸ் தாக்குதலுக்கு எதிராகத் தற்காலிகத் தடுப்பரண்களை ஏற்படுத்திக்கொண்ட போராட்டக்காரர்கள்.
படக்குறிப்பு,கண்ணீர்ப்புகை, ரப்பர் குண்டு மட்டுமல்லாமல், நிஜ துப்பாக்கிக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.

புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட வன்முறை அமெரிக்காவை திகைக்க வைத்ததாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தங்கள் சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக பர்மிய ராணுவம் இழைத்துள்ள கொடூர வன்முறைக்கு எதிராக ஒரு குரலில் பேசும்படி உலக நாடுகளை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

வரலாற்றுப்பூர்வமாக மியான்மரின் நெருங்கிய நட்பு நாடான சீனா, அந்நாட்டில் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ராணுவத்துக்கு அழுத்தம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார் அவர்.

சர்வதேச அமைதி காக்கும் அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மியான்மரில் உள்ள நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்தது. ஆனால், வெறும் கண்டனத்தோடு நிறுத்திக்கொண்டது. காரணம் அதன் உறுப்பு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் இது அவர்களது உள்நாட்டு விவகாரம் என்று கூறி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஒடுக்குமுறைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்டை நாடுகளான தென்கிழக்கு ஆசிய நாடுகள் முன்னதாக செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டம் நடத்தி மியான்மர் நிலவரம் குறித்து விவாதித்தன.

ஆனால், சில நாடுகளின் அமைச்சர்கள் மட்டுமே சூச்சியை விடுதலை செய்யவேண்டும் என்று ராணுவ ஆட்சியை வலியுறுத்தினர்.

Map of Myanmar showing Mandalay, Nay Pyi Taw and Yangon

கடந்த நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூச்சியின் நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி (NLD) கட்சி அபார வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம். ஆனால், அப்படி முறைகேடு நடந்ததைக் காட்டும் ஆதாரம் எதையும் அது தரவில்லை. தேர்தல் ஆணையத்தை மாற்றியமைத்த ராணுவம், ஓராண்டில் புதிய தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

2px presentational grey line

மியான்மர் – சில குறிப்புகள்

  • மியான்மர், பர்மா என்றும் அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்நாடு ராணுவ சர்வாதிகாரத்தில்தான் இருந்தது.
  • 2010 வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015ல் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டில் பிரபல தலைவர் ஆங் சாங் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
  • 2017ம் ஆண்டு போலீஸ் மீது ரோஹிஞ்சா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றிய ராணுவம், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாட்டை விட்டு வங்கதேசத்துக்கு விரட்டியடித்தது. இனத் தூய்மைவாதத்துக்கான துல்லியமான எடுத்துக்காட்டு இது என்று ஐ.நா. குறிப்பிட்டது.

Back to top button