செய்திகள்

யாழில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றையதினம் சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் நேற்றையதினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்நிலையில் அவர்களில் 143 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியில் உள்ள மரக்கறி வியாபாரிகள், கடைகளின் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 127 பேருக்கு தொற்று உள்ளமை நேற்றையதிமன்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, தென், மேல், மத்திய வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குமுதல் கிழக்குவரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

சீனாவுடனான தொடர்பு : இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் – பங்களாதேஷ் 

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும்போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திமன்றி சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக்கொள்கையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது ‘கடன்பொறி’ மூலோபாயத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்துவருகின்ற மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளைக் கவர்ந்திழுக்கும் வேளையில், இவ்வாறானதொரு கருத்து வெளியாகியிருப்பதாக சர்வதேச ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு வழங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளமையில் இருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் ஜிபோட்ரி பெற்ற கடனின் பெறுமதி, அந்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதமானவற்றையும் விட அதிகமாகும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மேலும் ‘எமது நாட்டின் இறையாண்மையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம். 

விடுதலையை இலக்காகக்கொண்ட போராட்டத்தின் ஊடாக நாம் தற்போது சுதந்திர நாடாக மாற்றமைந்துள்ளோம்.

 ஆகவே எமது பெறுவனவுகளைச் சரிவரக் கண்காணிக்கும் அதேவேளை, வெளிநாடுகளிடமிருந்து பெறும் கடன்களை மீளச்செலுத்தக்கூடிய எமது ஆற்றல் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றோம்’ என்றும் பங்களாதேஷ் பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button