ரஜினிகாந்த்: “நான் முதல்வர் ஆக விரும்பவில்லை” – Rajini Full Speech
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.
என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.
25 ஆண்டுகளாக சொல்லவில்லை
அரசியல் குறித்த என் நிலைப்பாட்டை விளக்கினால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தெளிவு வரும் என்று கூறிய அவர், “எல்லாரும் கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதாக எழுதுகிறார்கள். நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. நான் முதல் முதலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது டிசம்பர் 31, 2017ஆம் தேதிதான்,” என்றார்.
“மீன் குழம்பும், பொங்கலும்”

“நான் அப்போது பேசிய போது சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும்” என்றேன். மீன் குழம்பு “பாத்திரத்தில் சக்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடப்பது இருக்கும் ” என்று தெரிவித்தார்.
கட்சி பதவிகள்

“திமுக அதிமுகவில் 50 ஆயிரத்துக்கும் மேல் கட்சி பதவிகள் உள்ளன. ஏன் இத்தனை பதவிகள் ? கல்யாணம் நடக்கும் போதுதான் சமையற்கலைஞர்களும், வேலை ஆட்களும் தேவை. மற்ற நேரங்களில் தேவை இல்லை. அதுபோலத்தான் அரசியலும். தேர்தல் நேரத்தில்தான் கட்சிப் பதவிகள் தேவை. நான் அதற்காக உங்களை வேலை ஆட்கள் என சொல்லவில்லை” என்றார்.
அதிகளவில் கட்சி பதவிகள் இருந்தால் ஊழல்தான் நடக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“முதல்வர் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை”
“என்னால் முதல்வர் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நான் கட்சி தலைவர்தான். ஆட்சி தலைவர் இல்லை. அன்பு கொண்டவரை, பாசம் கொண்டவர், நிர்வாகத் திறமை உடையவரையே முதல்வர் ஆக்குவேன்” என்று மாவட்ட செயலாளர்களை சந்தித்தப் போது விவாதித்தேன். ஆட்சியில் நான் தலையிட மாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்.” என்றார்.
“அது போல 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவேன் என்று கூறினேன். இவர்களிடம் மட்டுமல்லாமல், இது குறித்து நான் பலரிடம் விவாதித்தேன் ” என்றார்.
“ஆனால், பெரும்பாலானவர்கள் நான் சொன்னதை ஒப்புக் கொள்ளவில்லை. மாற்றதைக் கூட ஒப்புக் கொள்கிறோம். ஆனால் நீங்கள்தான் முதல்வராக வேண்டும் என்று கோரினார்கள். நான் மற்றவர்களிடம் இது குறித்து பேசுங்கள், இதனை புரியவையுங்கள் என்றேன் ” என்று கூறிய அவர், “தலைவன் சொல்வதை தொண்டன் கேட்கவேண்டும். தொண்டன் சொல்வதை எல்லாம் தலைவன் கேட்க வேண்டிய தேவையில்லை,” என்றும் தெரிவித்தார்.
50 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஓரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்பவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் எனப் பெயரெடுத்தவர்களை தேர்வு செய்து, 60லிருந்து 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் ஒய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விருப்பம் இருந்தால் இயக்கத்தில் சேர விரும்பினால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.


தமிழ்மண் புரட்சிக்கு பெயர்பெற்ற நிலம்
“காந்தி மாறியது இங்குதான். விவேகானந்தர் கர்ஜனை செய்த பூமி இதுதான். இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, ஒரு மாநில கட்சி ஆட்சி செய்த பூமி இது. அது போல ஒரு புரட்சி மீண்டும் வர வேண்டும்.” என்றார்
வாக்கை பிரிக்க நான் வர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், “எனக்கு 71 வயது. பிழைத்து வந்திருக்கிறேன். இப்போது ஆட்சியை பிடித்தால்தான் உண்டு, அடுத்த தேர்தலில் எல்லாம் பார்த்து கொள்ள முடியாது,” என்றார்.





காலத்தைக் கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?
ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா?
70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்.