செய்திகள்

திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா? பூமிக்கு என்ன ஆகும்?

பாரீஸ் விண்வெளி ஆய்வகம் (Observatoire de Paris) எடுத்த திருவாதிரை விண்மீனின் படம். மிருகசீரிஷம் உடுக்கூட்டத்தில் இது இடம் பெற்றுள்ளது.
பாரீஸ் விண்வெளி ஆய்வகம் (Observatoire de Paris) எடுத்த திருவாதிரை விண்மீனின் படம். மிருகசீரிஷம் உடுக்கூட்டத்தில் இது இடம் பெற்றுள்ளது. அருகில் ஒப்பீட்டளவில் சூரியன் எவ்வளவு சிரியதாக உள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை L. CALÇADA/AFP VIA GETTY IMAGES

திருவாதிரை நட்சத்திரம் – சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயராக இருக்கும். பலர் இந்த நட்சத்திரத்தில் பிறந்ததாகவும் சோதிடம் சொல்லும். அந்த திருவாதிரை நட்சத்திரம் மரணப் படுக்கையில் இருப்பதாக கடந்த சில நாள்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

விண்வெளியில் பல்லாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. நம் சூரியனும் ஒரு விண்மீன்தான். ஒவ்வொரு விண்மீனும் ஒரு சூரியன்தான். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கோள் மண்டலங்கள் இருக்கக்கூடும். மனிதர்களுக்கு இருப்பதைப் போல விண்மீன்களுக்கும், குழந்தைப் பருவம், வளர்ச்சி, முதுமை ஆகியவை உண்டு.

அளவில் மிகவும் பெரியதாக உள்ள விண்மீன்கள் அதன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் ஊதிப் பெருத்து கடைசியில் வெடித்துச் சிதறும் நிகழ்ச்சிப் போக்கை ‘சூப்பர் நோவா’ என்பார்கள். இப்படி ஊதிப் பெருக்கும்போது அந்த விண்மீனின் பிரகாசம் மங்கும்.

இப்போது நம் திருவாதிரைக்கு வருவோம்.

திருவாதிரை (Betelgeuse) என்பது விண்வெளியில் மிருகசீரிஷம் (Orion) என்று தமிழில் அறியப்படும் உடுக்கூட்டத்தில் (உடு என்றால் விண்மீன் என்று பொருள்) இடம் பெற்றுள்ள ஒரு விண்மீன். இது நம் சூரியனைப் போல பல்லாயிரம் மடங்கு பெரியது. சுருங்கி விரியும் தன்மையுள்ளது. இரவு வானில் மிகவும் பிரகாசமானது. எப்போது இருந்தாலும், சூப்பர் நோவா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு விண்மீன் இது. 1 லட்சம் ஆண்டில் இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்பட்டுவந்தது. இதன் உட்கருவில் தனிமங்கள் எரிவது அதிவேகமாக நடந்துவந்தது.

இப்போது எதிர்பார்த்தைவிட விரைவாக சூப்பர் நோவா ஆகும் அறிகுறிகள் தெரிவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். விரைவாக திருவாதிரை தமது பிரகாசத்தை இழந்து, வீங்கிப் பெருத்துவருவதே இதற்குக் காரணம்.

மேலே காணப்படும் டிவிட்டர் பதிவில் 2019 ஜனவரியில் இருந்ததை விட டிசம்பரில் எவ்வளவு தூரம் அது தன் பிரகாசத்தை இழந்திருக்கிறது என்பதை படங்களைக் கொண்டு காட்டியுள்ளார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் திருவாதிரை நட்சத்திரம் குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் விண்வெளி ஆய்வாளர் சரஃபினா நான்ஸ். தமது வழக்கமான பிரகாசத்தில் அது 36 சதவீதத்தை இழந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

மிருகசீரிஷம் என்ற உடுக் கூட்டத்தில் இடம் பெற்றுள்ளது திருவாதிரை.
மிருகசீரிஷம் என்ற உடுக் கூட்டத்தில் இடம் பெற்றுள்ளது திருவாதிரை.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

ஆனால், இப்போது திடீரென திருவாதிரைக்கு என்ன ஆனது? இது விரைவில் வெடித்துச் சிதறும் என்று செய்திகள் வருவதன் பின்னணி என்ன? விரைவில் என்றால் எவ்வளவு விரைவில்? அப்படி நடந்தால் பூமிக்கு என்ன ஆகும்? இந்தக் கேள்விகளோடு இந்திய மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியும், தமிழில் அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பிபிசி தமிழின் சார்பில் பேசினோம்.

அவரது பேட்டியில் இருந்து:

ஓராண்டாகவே குறையும் பிரகாசம்

“பூமியில் இருந்து பார்க்கும்போது மிகப் பிரகாசமாகத் தெரியும் விண்மீன்களைப் பட்டியலிடும்போது, மிகப் பிரகாசமாக முதலிடத்தில் இருப்பது சிரியஸ் என்ற விண்மீன். இந்தப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்து வந்தது திருவாதிரை. ஆனால், சுமார் ஓராண்டாகவே இந்த பிரகாசம் மங்கத் தொடங்கி இப்போது 24 வது இடத்துக்கு சென்றுள்ளது இந்த விண்மீன்.

ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் 'வெரி லார்ஜ் டெலஸ்கோப்' என்ற தொலை நோக்கியால் எடுக்கப்பட்ட திருவாதிரை நட்சத்திரத்தின் படம்.
ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் ‘வெரி லார்ஜ் டெலஸ்கோப்’ என்ற தொலை நோக்கியில் பொருத்தப்பட்ட அடாப்டிவ் ஒபாக் சிஸ்டம் என்ற கருவி எடுத்த திருவாதிரை நட்சத்திரத்தின் படம்.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

பூமியில் இருந்து திருவாதிரை எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துகள் இருந்ததுண்டு. எனினும் மிகச் சமீப காலத்தில் ஹிப்பார்கஸ் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் செய்யப்பட்ட கணக்கீட்டின்படி இங்கிருந்து 724 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது இருக்கிறது திருவாதிரை” என்கிறார் வெங்கடேஸ்வரன்.

எவ்வளவு தூரத்தில் இருக்கிறது திருவாதிரை?

ஒளியாண்டு என்பது விண்வெளியில் தூரத்தைக் கணக்கிடும் ஒரு நடைமுறை. விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணம் செய்யும். இது மாறாதது. இந்த வேகத்தில் ஓராண்டு பயணம் செய்தால் ஒளி எவ்வளவு தூரம் செல்லுமோ அதுதான் ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும். இதன்படி பார்த்தால் 724 ஆண்டுகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் சென்று சேரும் தூரத்தில் இருக்கிறது திருவாதிரை.

திருவாதிரை வெடித்தால், புவிக்கு என்ன நடக்கும்?
திருவாதிரை வெடித்தால், புவிக்கு என்ன நடக்கும்?

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

“இதன் பொருள், இந்த திருவாதிரையின் பிரகாசத்தில் நாம் காணும் மாற்றங்கள் உண்மையிலேயே நடந்து முடிந்து 724 ஆண்டுகள் ஆகின்றன. இதை வரலாற்றில் வைத்து சொல்வதாக இருந்தால், முதலாம் பராந்தக சோழன் காலத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் என்ன நடந்ததோ அதைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம். வட இந்தியாவில் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சி நிலை பெற்றபோது திருவாதிரையில் நடந்ததையே நாம் இப்போது பார்க்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நட்சத்திரம் எவ்வளவு பெரியது?

இந்த விண்மீன் எவ்வளவு பெரியது என்று கேட்டபோது, “சுருங்கி விரியும் தன்மையுடைய திருவாதிரையின் ஆரம், சூரியனுடைய ஆரத்தைப் ஆரம் 550 முதல் 920 மடங்கு பெரியது. அளவு என்றால் சூரியனைப் போல அது 20 கோடி மடங்கு பெரியது. சூரியனைப் போல 15 மடங்கு அதிக நிறையுடையது. சூரியனைப் போல 5 ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலை வெளியிடக்கூடியது” என்றார் வெங்கடேஸ்வரன்.

இப்போது என்ன ஆனது?

“ஒரு விண்மீன் வீங்கிப் பெருக்கும்போது, அது மொத்தமாக வெளியிடும் ஆற்றல் குறையாது. ஆனால், அதன் பிரகாசம் குறையும். ஒரு சுவற்றின் மீது டார்ச் லைட் அடிக்கும்போது பக்கத்தில் இருந்து அடிந்தால் ஒளி பிரகாசமாகவும், தூரத்தில் இருந்தால் மங்கலாகவும் சுவற்றில் தெரியும். ஆனால், டார்ச்சில் இருந்து வெளியாகும் ஒளியின் அளவு மாறுவதில்லைதானே. அதனை ஒப்பிட்டு இதனைப் புரிந்துகொள்ளலாம்.

த.வி.வெங்கடேஸ்வரன்படத்தின் காப்புரிமை VENKATESWARAN THATHAMANGALAM VISWANATHAN/FACEBOOK

கடந்த ஓராண்டாக திருவாதிரை மங்கி வருகிறது என்றால் அது வீங்கிப் பெருத்து வருகிறது என்று பொருள். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெரிதாக இது வீங்கிப் பெருக்கும்போது, இதன் புறப்பரப்பு, உட்கருவின் ஈர்ப்பு விசைக்கு அடங்காமல்போய் உடைந்து சிதறும். இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அது சில ஆண்டுகளிலும் நடக்கலாம். 500 ஆண்டுகளோ, பல்லாயிரம் ஆண்டுகளோ ஆகலாம்”.

வெடித்தால் பகலிலேயே பார்க்கலாம்

அது போன்ற ஒரு வெடிப்பு இப்போது நடக்குமானால், அப்போது திருவாதிரை நட்சத்திரம் பலகோடி சூரியன்களின் ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த வின்மீன் நிலவின் அளவுக்கு வானத்தில் பெரிதாவதை பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்கலாம் என்பது மட்டுமல்ல, அதனைப் பகலில் கூட பார்க்கலாம்.

சூப்பர் நோவா எனப்படும் இந்த வெடிப்பு நிகழ்வு மூன்று கட்டங்களில் நடக்கும். இது ஒருவேளை 50 ஒளியாண்டு தூரத்தில் நடக்குமானால், பூமியில் உயிர்கள் அழியும். புவியை அடையும் எக்ஸ் ரே கதிர்களின் கதிரியக்க அளவு ஹிரோஷிமா, நாகசாகியில் நடந்த அணுகுண்டு தாக்குதலைப் போல இருக்கும். ஆனால், 724 ஒளியாண்டு தூரத்தில் நடப்பதால் புவிக்குப் பாதிப்பு ஏதும் இருக்காது, என்கிறார் வெங்கடேஸ்வரன்.

இதற்கு முன்பு இப்படி ஒரு சூப்பர் நோவா நிகழ்வை புவியில் இருந்து உணர முடிந்த நிகழ்வு 1987ல் நடந்தது. புவியின் தென் கோளத்தில் இருந்து பார்க்க முடிந்த இந்த நிகழ்வை சூப்பர்நோவா 1987-ஏ என்று அழைக்கிறோம்.

இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து புவிக்கு வருகிற நியூட்ரினோக்களைக் கொண்டு இந்த நிகழ்வைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், கடந்த முறை நடந்தபோது வெளியான நியூட்ரினோக்களை ஆராயப் போதுமான அளவு ஆய்வகங்கள் உலகில் இல்லை. இப்போது இந்த நிகழ்வு நடந்தால், இதனை கண்காணிக்க உலகில் அண்டார்டிகா, ஜப்பான் போன்ற இடங்களில் ஆய்வகங்கள் உள்ளன என்றார்.

1987ம் ஆண்டு நிகழ்ந்த சூப்பர்நோவா 1987A நிகழ்வு.
1987ம் ஆண்டு நிகழ்ந்த சூப்பர்நோவா 1987A நிகழ்வு. இதுதான் சமீப காலத்தில் புவியில் இருந்து பார்க்க முடிந்த சூப்பர் நோவா நிகழ்வு.

படத்தின் காப்புரிமை NASA

தமிழகத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகமும் இதனை கண்காணக்க முடியுமா என்று கேட்டபோது, “அது சாத்தியமில்லை. அங்கிருந்து வருகிற உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை தமிழகத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தால் உணர முடியாது. தமிழகத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகம், உலகில் எங்காவது அணுக் கசிவு நடந்தால் அதைக் கண்டறியக்கூடியது” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் திருவாதிரையின் பண்பாட்டு முக்கியத்துவம் என்ன?

“திருவாதிரை வின்மீணை வட இந்தியாவில் ‘ஆத்ரா’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆத்ரா என்றால் ஈரப்பதம் என்று பொருள். இந்த விண்மீன் வட இந்தியாவில் ஜூன் 4-5 தேதிகளில்தான் தெரியும். இது வட இந்தியாவில் மழை அதிகம் பெய்யும் காலம். எனவே இதனை மழைக்காலத்தின் தொடக்கத்துடன் இணைத்துப் பார்க்கிறார்கள். அதனால்தான் இதன் பெயரும் ஆத்ரா என்று ஆனது.

தமிழ்நாட்டில், தமிழ் மாதங்களில் ஒன்றான பங்குனியில் இந்த திருவாதிரை வின்மீண் நன்கு தெரியும். எனவே இது கோடைக் காலத் தொடக்கத்தைக் குறிப்பதாகப் பார்க்கப்பட்டது. இதையொட்டிதான் இந்த வின்மீண் தெரியும் நாள் ஆருத்ரா தரிசனம் (தரிசனம் என்பது காட்சிதானே) என்று அழைக்கப்பட்டது. இது சூரியன் உதிக்கும் புள்ளி கிழக்கு திசையில், தெற்கு நோக்கி நகர்வதைக் குறிக்கும், தட்சணாயன காலத்தின் தொடக்கமாகவும் இது பார்க்கப்பட்டது” என்று கூறிய வெங்டேஸ்வரன்,

இந்த கணக்கீடுகள் எல்லாம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டவை. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. பழைய கணிப்புகள் இப்போது மாறிவிட்டன. ஆனால், பழைய வானியல் அறிவியலை, கணிப்புகளை மாறாத புனிதமாக, மத வழக்கமாக மாற்றிக்கொண்டதால், அந்தப் பழைய அறிவியல் புதிய வளர்ச்சியை உள்வாங்கத் தவறிவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏதாவது ஆகுமா?

“திருவாதிரை நட்சத்திரம் வெடித்தால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதாவது ஆகுமா?” என்று வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.

பலமாக சிரித்துவிட்டு அவர் சொன்னார், “இப்போது ஒரு வேளை திருவாதிரை வெடித்து சூப்பர் நோவா ஆகும் நிகழ்வை, அது நிலவின் அளவுக்கு விண்ணில் ஒளிர்வதை நாம் பார்க்க நேர்ந்தால், அந்த நிகழ்வு 724 ஆண்டுகளுக்கு முன்பே நடந்துவிட்டது என்று பொருள். ஏனெனில், அந்த நிகழ்வின் ஒளி புவியை வந்தடைய இத்தனை காலம் ஆகும். குறிப்பிட்ட ஒருவர் பிறப்பதற்கு 724 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இவரை எப்படிப் பாதிக்கும்? என்று அவர் கேட்டார்.

Sources : BBC Tamil

Back to top button