ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள்
வலசை வரும் பூநாரை என்று தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன.
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் பகுதிக்கு அதிக அளவில் ஆஸ்திரேலிய ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்தப் பறவைகள் மிகப் பெரிய அளவில் தனுஷ்கோடி வந்து குவிந்துள்ளன. கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற் பகுதியில் இவை ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன.
ஃப்ளமிங்கோக்களில் அன்டீன் ஃப்ளமிங்கோ, அமெரிக்கன் ஃப்ளமிங்கோ, சைலியன் ஃப்ளமிங்கோ, ஜாம்ஸெஸ் ஃப்ளமிங்கோ போன்ற வகைகள் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகை, வேதாரண்யம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றன.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி கடற்பகுதியில் தற்போது ஃப்ளமிங்கோ உட்பட பல வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்துள்ளன. இதனை ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆர்வமாகப் பார்த்து மகிழ்வதுடன் ஃப்ளமிங்கோவுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
ஃப்ளமிங்கோ எப்படி இருக்கும் என்ன சாப்பிடும்?
ஃப்ளமிங்கோ பறவைகள் மூன்றிலிருந்து ஐந்து அடி உயரம் இருக்கும். இளம் சிவப்பு நிறக் கால்களையும், வெண்ணிற உடற்பகுதியையும் கொண்டிருக்கும். ஃப்ளமிங்கோவின் அலகு நுனி கருப்பு நிறமாகவும், அகலமாகவும், வளைந்தும் காணப்படும். இவை கரையோரங்களில் வாழும் பறவை என்பதால் சேறு மற்றும் சகதியில் உள்ள பாசிகளை உணவாக உட்கொள்ளும்.
அதே போல் நீர் நிலைகளில் சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் கொத்தி எடுத்து வடிகட்டி உணவாக்கி கொள்ளும். ஃப்ளமிங்கோக்கள் தாவர மற்றும் ஊண் உணவுகளை உட்கொள்ளும். இவை கூடு கட்டுவதில்லை. மாறாக, தண்ணீரில் நின்ற படியே தூங்கும்.

ராமேஸ்வரத்தின் விருந்தினர்களான இவை இந்த ஆண்டு ஏராளமாக வந்துள்ளது பற்றி மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷிடம் கேட்டது பிபிசி தமிழ். “தனுஷ்கோடி கடல் பகுதிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக இந்த ஆண்டு வெளிநாட்டுப் பறவைகளான ஃப்ளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. கடந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் பறவைகள் மட்டுமே வந்தன. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்ததன் காரணமாக சுமார் 8 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. இது கடந்த வாரம் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், “ஃப்ளமிங்கோ பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தனுஷ்கோடி பகுதிக்கு வருகின்றன என பொது மக்கள் நம்புகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. உணவு தேடி மட்டுமே ஃப்ளமிங்கோ பறவைகள் இங்கு வருகின்றன” என்றார் அவர்.
வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை
மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்திலேயே ஃப்ளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வரும் பகுதி தனுஷ்கோடிதான். இவற்றை யாரும் வேட்டையாடினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்” என்றார்.

இந்த ஆண்டு வனத்துறை நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் எவ்வளவு பறவைகள் வந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்று பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற தன்னார்வலர் ஜெயசங்கரிடம் கேட்டது பிபிசி தமிழ். “கோதண்டராமர் ஏரியில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஃப்ளமிங்கோ பறவைகள் அதிகபட்சமாக காணப்படுகின்றன” என்று கூறினார்.

மேலும் இது குறித்து பறவைகள் கணக்கெடுக்கும் மற்றொரு தன்னார்வலர் அபிஷேக் பிபிசி தமிழிடம் பேசினார். “ராமநாதபுரம் வனத்துறையினரின் ஒத்துழைப்புடன் மன்னார் வளைகுடா பகுதியில் பறவைகள் கணக்கெடுத்து வருகிறோம். வலசை பறவைகளை இப்பகுதிகளில் அதிகமாக கணக்கெடுத்துள்ளோம். இந்தப் பருவம் முடிவடையும் நேரத்தில் கூட அதிகமான பறவைகள் இங்கு காணப்படுகின்றன. இது இங்கு பல்லுயிர்ப் பெருக்கம் (BIO DIVERSITY) நன்றாக உள்ளதைக் காட்டுகிறது. மீண்டும் இவ்வகையான வலசைப் பறவைகளை வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இப்பகுதியில் பார்க்கலாம்” என்றார் அவர்.