செய்திகள்

கொரோனா தொற்று: பாடசாலைகளுக்கு விடுமுறை, விசேட இயந்திரம் கையளிப்பு; தயாராகும் இலங்கை – கள நிலவரம்

இலங்கையில் கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் (மார்ச் 12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக இன்று மாலை அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இவராவார்.

உலகம் முழுவதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் – 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையை தாக்கியுள்ளதையடுத்து, இலங்கை மக்கள் மத்தியில் பாரிய குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோவிட் – 19 வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் நேற்று முன்தினம் (மார்ச் 10) இலங்கையர் ஒருவர் நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே இந்த குழப்பகர நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்குள் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார்.

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் பூரண குணமடைந்து சீனா நோக்கி பயணித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்த பின்னணியில், நேற்று முன்தினம் நாட்டிற்குள் மற்றுமொரு நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இலங்கைக்குள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபர் இவர் என்றாலும், இந்த தொற்று காரணமாக நாட்டிற்குள் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இவர் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சுகாதார பிரிவினர் சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும், அவர்களுக்கான உணவு வகைகளை வெளியிலிருந்து வழங்கி வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

பரவிவரும் போலி தகவல்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையரின் மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்றுபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

கொழும்பில் இன்று (மார்ச் 12) அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, விடயங்களை தெளிவூட்டிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான எந்தவித அறிகுறிகளும் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த சிறுவன் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எந்தவிதத்திலும் அச்சப்பட தேவையில்லை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், சுகாதார பிரிவினரால் வழங்கப்படும் அறிவித்தல்களை மாத்திரம் நம்புமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

போலீஸார் விசேட கோரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என இலங்கை போலீஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அவ்வாறு போலி தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.

விசேட இயந்திரம் சுகாதார அமைச்சுக்கு கையளிப்பு

விசேட இயந்திரம் சுகாதார அமைச்சுக்கு கையளிப்புபடத்தின் காப்புரிமை PRIME MINISTER MEDIA

கொரோனா உள்ளிட்ட அனைத்து விதமான வைரஸ் தொற்றுக்களையும் அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையிலான இயந்திரமொன்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் இந்த இயந்திரம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் நேற்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டது.

3000 டாலர் பெறுமதியான இந்த இயந்திரம், கொரியாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான வைரஸ் தொற்றையும் மிக குறுகிய நேரத்தில் இந்த இயந்திரம் அடையாளம் கண்டுக்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையில் கொரோனா தொற்றுக்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பின்னணியில், அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் டளஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, நாளைய தினம் (மார்ச் 13) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறுகின்றது.

அத்துடன், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச நிலைமையை தணிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் கல்வி அமைச்சின் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 29 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பொலன்னறுவை – கந்தகாடு பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தலைமையில் தொடரும் கலந்துரையாடல்கள்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால், இலங்கை எதிர்நோக்கியுள்ள நிலைமைபடத்தின் காப்புரிமை PMD

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது நாட்டிலுள்ள அனைவரதும் கடமை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை ஒருவர் மாத்திரமே இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், வேறு எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sources : BBC

கொரோனா குறித்த விடயங்களை அறிந்து கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்..!

Back to top button