கீழடி நாகரிகம்: வெளிவரும் 2500 ஆண்டு ரகசியம், பெரிய மண்பானை கண்டெடுப்பு – விரிவான தகவல்
11முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: “கீழடியில் பெரிய மண்பானை கண்டெடுப்பு”
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை கண்டெடுக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மாா்ச் 31ஆம் தேதி வரை கீழடியை பாா்வையிட சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே கீழடியில் ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நடந்த 5 கட்ட அகழாய்வுகளில் கீழடி நகர நாகரிகம் சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்தது. அதன்பின் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய 4 இடங்களில் 6 ஆம் கட்ட அகழாய்வுக்காக தமிழக அரசு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து, கடந்த பிப்ரவரி19 இல் அகழாய்வுப் பணியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி நடக்கிறது. இங்கு 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு அதிகளவில் முதுமக்கள் தாழிகள், மண்பானைகள், குடுவைகள் கண்டறியப்பட்டன. மேலும் அகரத்தில் 2 ஏக்கா் அரசு நிலத்தில் அகழாய்வுப் பணிக்காக சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. விரைவில் மணலூரிலும் அகழாய்வுப் பணி தொடங்கும்.
இந்நிலையில் கீழடியில் நீதியம்மாள் என்பவரின் நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு செங்கல் சுவா்கள் இரண்டும், சிறிய அளவிலான மண்பானைகளும் கண்டறியப்பட்டன. மேலும் கீழடியில் தோண்டப்பட்ட ஒரு குழியிலிருந்து சுமாா் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண் பானை இருந்தது கண்டெடுக்கப்பட்டது.
கீழடியை பாா்வையிடத் தடை: கீழடியில் நடந்து வரும் அகழாய்வைக் காண பல இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மாா்ச் 31 ஆம் தேதி வரை அகழாய்வை பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என கீழடி ஊராட்சித் தலைவா் வெங்கடசுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இந்து தமிழ் திசை: “ரயில் நிலையத்தில் நெரிசலைத் தவிர்க்க நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு”

கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் நெரிசலைத் தவிர்க்க நடைமேடை கட்டணம் தற்காலிகமாக ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை வரும் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. இருப்பினும், சென்னையில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதனால், ரயில் நிலையங்களில் நெரிசலை தவிர்க்க, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைக்கட்டணத்தை ரூ.50 ஆக சென்னை ரயில்வே கோட்டம் உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் வேகமாகப் பரவி, பொதுமக்களை பாதித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் கூடுவதைத் தடுக்கவும், இந்நோய் மேலும் பரவாமல் இருப்பதற்காகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் வருவதைத் தடுப்பதற்காக நடை மேடைக் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்படுகிறது. இக்கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. வரும் 31-ம் தேதி வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும். இந்த நட வடிக்கை கோவிட்-19 வைரஸ் மேலும் பரவுவதை ஓரளவுக்கு தடுக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி: “கோழி சாப்பிட்டதால் கொரோனா பாதிப்பு என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு”

கோழி அல்லது முட்டை சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தது என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் நேற்று நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமீபகாலமாக கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழகத்தில் கறிக்கோழி, முட்டைக்கோழி மற்றும் முட்டை விலை கடுமையாக சரிவடைந்து உள்ளது. 450 காசுக்கு விற்பனை செய்து வந்த முட்டை தற்போது 125 காசுகள், 150 காசுக்கு கீழ் விற்கும் நிலைக்கு வந்து உள்ளது. கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி ரூ.10-க்கு விற்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க காரணம், கொரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான வதந்தியை சமூக வலைதளம் மூலம் பரப்பியதே ஆகும்.
இந்த வதந்தி எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழி அல்லது முட்டை சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் வந்தது என்று யாராவது நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும். தேக்கம் அடைந்த முட்டையை, கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்து வருகிறோம். கொரோனா தொடர்பான வதந்தியால் இதுவரை கோழி மற்றும் முட்டையில் ரூ.500 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: “மக்களின் அடிப்படை உரிமைகளை சிஏஏ பறிக்கவில்லை”

குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படை உரிமைகளை மீற வில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டம் சட்டபூர்வமானது என்றும் இதுகுறித்து நீதிமன்றம் முன்பு கேள்வி எழுப்ப முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
இந்த சட்டம் எந்த ஒரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையையும் மீறும் வகையில் இல்லை. சட்டத்தையோ பொது மக்களின் ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற தன்மையையோ இந்த சட்டம் பாதிக்காது. மேலும் இந்த சட்டம் எவருடைய குடியுரிமையையும் பறிக்காது. மாறாக குடியுரிமை வழங்கவே இந்த சட்டம் வகை செய்கிறது. இந்திய குடிமகனுக்கும் இந்த சட்டத்துக்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.