வவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை?
வவுனியாவில் உணவகமொன்றின் சிற்றுண்டிக்குள் (முட்டை ரோல்) பாவனைக்கு ஒவ்வாத வினோத முட்டை நுகர்வோரால் இனங்காணப்பட்டு வவுனியா நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகத்துடன் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இன்று (09-09) மாலை தேனீர் அருந்தச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்ட சிற்றுண்டிக்குள் இருந்த முட்டை விநோதமாக இருந்துள்ளது.
குறித்த முட்டை றப்பரினாலான முட்டை போன்ற தோற்றத்தில் இருந்ததுடன் அதன் இயல்பும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தமையை உணர்ந்த வாடிக்கையாளர்கள் வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த பரிசோதகர் நீண்ட ஆய்வின் பின்னர் குறித்த சிற்றுண்டிகளை கையகப்படுத்தி மேலதிக நடவடிக்கைகளுக்காக எடுத்து சென்றுள்ளனர்.
குறித்த வாடிக்கையாளர்கள் தாம் உட்கொண்ட சிற்றுண்டியின் உள்ளிருக்கும் முட்டையின் குறைபாட்டை உணவகத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியபோதும் அதை பொருட்படுத்தாத உரிமையாளர் அவர்களால் வீசப்பட்ட சிற்றுண்டி மற்றும் அவருக்கு பிரித்து காண்பிக்கப்பட்ட சிற்றுண்டிக்கும் பணத்தை அறவிட்டுவிட்டு ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் பரிமாற முற்பட்டமையை தொடர்ந்தே இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு முறையிடப்பட்டுள்ளது.