செய்திகள்

புத்தாண்டிலிருந்து அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம்..!

அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை தனது பதவிக்காலத்திற்குள் முடிவுறுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயணிகள் போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் மக்களின் வாழ்க்கையோடு நேரடி தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் வினைத்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையுடைய தூய நிறுவனங்களாக செயற்பட வேண்டும்.

அனைத்து அரச சேவை வழங்கல்களும் இலகுவானதாக மக்களை சென்றடைவதற்கு, அரச நிறுவனங்களில் தற்போதுள்ள தேவையற்ற சட்டதிட்டங்களும், ஒழுங்கு விதிகளும் விரைவில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அரச சேவையில் உள்ள அனைத்து முறைக்கேடுகளும் இல்லாது செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு இடம்பெறும் முறைக்கேடுகளை கண்டறிந்து அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு, புலனாய்வுத் துறைக்கும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையாளர் ஒருவர் கையூட்டல் மற்றும் மோசடிகளுடன் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்களது பதவி நிலைகளை கருத்திற்கொள்ளாது தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Back to top button