செய்திகள்

200 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய நாணயங்களை அச்சடிக்கவில்லை என்கிறது அரசாங்கம்

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய நாணயம் அச்சடித்துள்ளதாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது.

ஆனால்  அவ்வாறு பணம் அச்சடிக்கப்படவில்லை. புதிய நாணயம் அச்சடிக்கப்பட்டிருந்தால் மத்திய வங்கியின் புதிய ஆளுநரின் கையொப்பம் இருக்க வேண்டும். அவ்வாறு உள்ளதா என்ற ஆதாரத்தை காட்டுங்கள் என அரசாங்கம் கூறுகின்றது.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

மேலும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளையை அடுத்து வங்கிகள் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டது. எனினும் இப்போது எமது அரசாங்கத்தில் அதனை சரி செய்து வருகின்றோம். வங்கிகள் மீதான நம்பிக்கைக்கு மத்திய வங்கி பொறுப்பேற்கும் என அவர்கள் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

அதேபோல் அரசாங்கம் புதிதாக 200 மில்லியன் ரூபாய்களை அச்சடிப்பதாக  கூறுவது பொய்யான கருத்தாகும். அவ்வாறு எதுவும்  இடம்பெறவில்லை. நாட்டில் இப்போது பொருளாதார நெருக்கடிகள் உள்ளதை  நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த சுமையை நாம் மக்கள் மீது சுமத்தவில்லை.

கொவிட் 19 நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை வங்கியில் 1600 கோடி ரூபாய்களை பெற்றே மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். நிதி முகாமைத்துவத்தில் மிகவும் கவனமாக நாம் கையாள்கின்றோம். அனாவசிய செலவுகள் அனைத்தையும் நாம் கட்டுப்படுத்தி மக்களுக்கான சேவையை வழங்குகின்றோம்.

இவ்வாறு இருக்கையில் நாம் புதிய பணம் அச்சடித்துள்ளதாக கூறுகின்ற காரணியில் குறித்து தெளிவான காரணிகள் எதனையும் முன்வைக்கவில்லை. எவ்வாறான பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது என்பதை கூறவேண்டும் என்றார்.

Back to top button