Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

குரு பகவான்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

குருவாக பிறந்த அக்னி !

படைக்கும் கடவுள் பிரம்மதேவனின் மானஸ புத்திரர்கள் சப்த ரிஷிகள். அவர்களில் ஒருவர் ஆங்கீரஸர். இவருடைய மனைவி வஸிதா ஸ்ரத்தாதேவி என்றும் மற்றொரு பெயர் உண்டு. அக்னி பகவானின் பிரதான பணி, ஆஹுதி என்பார்களே…   அப்படி அக்னி குண்டத்தில் நாம் சமர்ப்பிக்கும் தானியங்களையும், பிரசாதங்களையும் உரிய தெய்வங்களிடம் சேர்க்கும் பணியாகும்.  ஒருமுறை, இந்தப் பணியில் சலிப்பு ஏற்பட்டு, அதைக் கைவிட்டுவிட்டார் அக்னி பகவான். அதனால் யாகம், ஹோமம் எதுவுமே உலகில் நடைபெறவில்லை. தெய்வங்களை வணங்க முடியவில்லை. அதன் விளைவாக, மழை பொய்த்தது; உலகில் பஞ்சம் தலைவிரித்தாடியது; மக்கள் மிகவும் துன்பம் அடைந்தனர்.
இதைக் கண்ட ஆங்கீரஸ முனிவர், உலக நன்மைக்காக அக்னி தேவன் விட்டுச் சென்ற பணியைத் தானே செய்யத் தொடங்கினார். உலகம் மீண்டும் செழித்தது.
அக்னி தேவனுக்கு மனசாட்சி உறுத்தியது. தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டோமே என்பதை உணர்ந்து, வருந்தினார். தனது பணியை சிரமேற்கொண்டு செய்த ஆங்கீரஸ முனிவரிடம் வந்து, அவரை வணங்கி, தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.
அதைக் கண்ட ஆங்கீரஸர் மிகவும் கருணையுடன் ”வருந்தாதே! செய்த தவற்றை உணர்ந்துவிட்டால் மன்னிப்பு உண்டு. உனக்கு என்ன வேண்டும், கேள்!” என வினவினார். அவரிடம், ”கருணையும் பெருந்தன்மையும் கொண்ட தங்களின் மகனாகப் பிறக்கவேண்டும்” என்று வேண்டினார் அக்னி. முனிவரும் ”அப்படியே ஆகுக” என்று வரம் தந்தார்.
ஏற்கெனவே, ஆங்கீரஸ முனிவருக்கு ஆறு மகன்கள் உண்டு. இவர்களுக்குப் பின், அக்னிதேவன் ஆங்கீரஸ முனிவரின் ஏழாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு பிரகஸ்பதி என்று பெயர். இவருக்குப் பின், பானுமதி என்ற பெண்ணும் பிறந்தாள்.

கிரக பதவி கிடைத்தது எப்படி?

பிரஹஸ்பதி ஓர் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும் என விரும்பினார் அவருடைய தந்தை. அவரிடம் இருந்தே  கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பிரஹஸ்பதி, காசிக்குச் சென்று சிவலிங்கம் ஸ்தாபித்து, கடுமையான தவத்தை மேற்கொண்டார்.
பதினாயிரம் தேவ ஆண்டுகள், பிரஹஸ்பதியின் தவம் தொடர்ந்தது. அதன் பலனாக, சிவனாரின் தரிசனமும் கிடைத்தது. ஆடல்வல்லானைத் தரிசித்து ஆனந்தக்கூத்தாடினார் பிரஹஸ்பதி. ”இறைவா, கருணைக்கடலே… பெரும்பேறு பெற்றேன்” என்று பலவாறு வணங்கித் தொழுதார்.
சிவபெருமானோ, ”பிரஹஸ்பதி! உன்னுடைய தவ வலிமையைக் கண்டு நான் மகிழ்ந்தேன். அதற்குப் பரிசாக, இன்று முதல் நீ தேவர்களுக்கு எல்லாம் ஆசானாக விளங்குவாய். குரு பகவான் என்றே அழைக்கப்படுவாய். கிரக அதிபதிகளில் ஒருவனாய் கிரகப் பதவியையும் உனக்கு யாம் அளித்தோம்’ என்று வரம் அளித்தார். அன்று முதல் பிரஹஸ்பதி, குருபகவான் என்று அழைக்கப்பட்டு, நவகோள்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

குருவுக்குக் கிடைத்த சாபம்!

ஒருமுறை, அசுரர்களின் குருவான சுக்ராச்சார்யர் இல்லற வாழ்வை முன்னிட்டு, பத்தாண்டு காலம் கண்காணாமல் சென்று விட்டார். ‘அசுரர்கள் மிக வலிமையோடு இருக்கிறார்கள். இனி, அவர்களுக்குத் தீமை எதுவும் நேரிடாது’ என்ற அதீத நம்பிக்கையில், அவர் அவ்வாறு சென்றுவிட்டார்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட குரு பகவான், சுக்கிரனைப் போன்று உருவம் ஏற்று, அசுரர்களிடம் சென்று, அவர்களுக்கு தவறான போதனை களை வழங்கி, இறையருள் கிட்டாமல் போகும்படி செய்தார். அதன் விளைவாக, அசுரர்கள் வலிமை இழக்க, தேவர்களின் கை ஓங்கியது!.
திரும்பி வந்த சுக்கிரன், குருபகவானின் சூழ்ச்சியை அறிந்து கோபம் கொண்டார். ”நான் அசுரர்களைப் பிரிந்து, அதனால் அவர்கள் அல்லல்படக் காரணமானது போன்று, நீரும் தேவர்களைப் பிரிந்து அவர்களது துன்பத்துக்குக் காரணமாவீர்!” என்று சபித்தார்.
சாபம் பலிக்கும் காலம் நெருங்கியது. இந்திரனைக் காண தேவலோகம் சென்றார் குரு. அங்கே தேவகன்னியருடன் பொழுது கழித்துக்கொண்டிருந்த இந்திரன், குருபகவான் வந்ததையே கவனிக்கவே இல்லை. இதனால் கோபம் கொண்ட குரு பகவான், ‘இனி, தேவர்களுக்கு உதவி ஏதும் செய்வதற்கில்லை’ என்று கூறி, கண்காணாமல் சென்றுவிட்டார்.
அப்படியே இந்திரனும், விப்ரசித்துவை தேவர்களின் குருவாக ஏற்றுக்கொண்டான். நாளடைவில் விப்ரசித்து, தேவர்களிடமே சதி வேலைகள் செய்து, அசுரர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினார். இதனால் அவரை இந்திரன் கொன்று விட்டான்.
இதையறிந்த விப்ரசித்துவின் தந்தை துவஷ்டா, பெரும் வேள்வி செய்து, அதிலிருந்து விருத்திராசுரன் என்பவனை உருவாக்கி, இந்திரனை அழிக்க ஏவினார்.


கசனின் கதை!
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவினி மந்திரத்தை அறிந்திருந்தார் சுக்கிர பகவான். அதன்பலனாக, அழியா வரம் பெற்றுத் திகழ்ந்தார்கள் அசுரர்கள்.
இந்த மந்திரத்தை அறிந்து வந்தால் தேவர்களுக்குப் பலமாக இருக்குமே என்று கருதிய குருபகவான், தனக்கும் தாராவுக்கும் பிறந்த மகனான கசனை அழைத்து, எப்படியாவது சஞ்ஜீவினி மந்திரத்தைச் சுக்கிரனிடம் இருந்து அறிந்து வரும்படி அனுப்பிவைத்தார்.
அதன்படியே கசன், சுக்கிரனிடம் சென்று அவருடைய நல் அபிமானத்தைப் பெற்றான். இதையறிந்த அசுரர்கள் கோபம் கொண்டனர். பல வழிகளில் கசனை அழிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.ஆனால், தன் மகள் தேவயானி கசன் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக, ஒவ்வொரு முறையும் கசனைக் காப்பாற்றி வந்தார் சுக்கிரன். எனவே, சுக்கிரனாலும் கசனைக் காப்பாற்ற முடியாதபடி, அவனை அழிக்கத் திட்டமிட்டனர் அசுரர்கள்.
கசனைக் கொன்று, அவனது சாம்பலை பானகத்தில் கலந்து சுக்கிரனுக்கே பருகக் கொடுத்தனர். இப்போது, தனது வயிற்றில் இருக்கும் கசனை உயிர்ப்பித்து, அவன் வெளியே வந்தால், சுக்கிரன் இறந்துவிடுவார் என்பது அவர்கள் திட்டம். இந்த நிலையில், சுக்கிரன் ஓர் உபாயம் செய்தார்.
வயிற்றுக்குள் இருக்கும் கசனுக்கு சஞ்ஜீவினி மந்திரத்தை உபதேசித்தார். அவன் உயிர் பெற்றுத் தன் வயிற்றில் இருந்து வெளிவந்ததும், அதே சஞ்ஜீவினி மந்திரத்தின் உதவியால் தன்னை உயிர்ப்பிக்கும்படி பணித்தார். அதன்படியே, முதலில் சுக்கிரர் கசனை உயிர்ப்பித்தார். அவருடைய வயிற்றுக்குள் இருந்து வெளியேறிய கசன், சஞ்ஜீவினி மந்திரத்தின் மூலம் சுக்ராச்சார்யரை உயிர்ப்பித்தான்.
ஆக, கசனுக்கு சஞ்ஜீவினி மந்திரம் உபதேசம் கிடைத்தது. இந்தச் சம்பவத்தின் மூலம் குருபகவானின் ஸித்தம் நிறைவேறியது..

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: