செய்திகள்

முதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்!

நாட்டில் முதன்முறையாக வீடு வாங்குவோர் முதலில் தரவேண்டிய Deposit – முன்பணம் தொடர்பாக அரசு உதவ முன்வந்துள்ளது.

ஒருவர் வீடு வாங்கும்போது அவர் வங்கியிலிருந்து கடன் பெறும் முன்பாக பத்து முதல் இருபது சதவீதம் முன்பணம் கட்டவேண்டும் என்ற நடைமுறையால் பலரும் வீடு வாங்க இயலாத நிலை காணப்படுகின்றது.

இதையடுத்து வீட்டுக்கடனை பெறுவோர் முன்பணமாக ஐந்து சதவீதம் செலுத்த அரசு அவர்களின் சார்பில் மீதி முன்பணம் செலுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தை லிபரல்-நஷனல் கூட்டணி கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தின்படி  ஒவ்வொரு ஆண்டும் “first come, first served” என்ற அடிப்படையில் முதலில் விண்ணப்பிக்கும் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் வலுகொண்ட பத்தாயிரம் பேருக்கு அரசு உதவும் என்று பெடரல் வீட்டு வசதித்துறை அமைச்சர் Michael Sukkar கூறினார்.

சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் வீட்டின் விலை ஏற்றத்தினால் முதன் முதலாக வீடு வாங்குகின்றவர்களுக்கு அது இயலாமற்போவதால் அரசு இந்த திட்டத்தை முன்னெடுப்பதாக அமைச்சர் Michael Sukkar தெரிவித்தார்.

ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் டொலர்களுக்கு குறைவாக வருமானம் ஈட்டும் தனிநபர்களும், 2 லட்சம் டொலர்களுக்கு குறைவாக வருமானம் பெறும் தம்பதியரும் அரசின் இந்த சலுகையைப் பெறுவதற்கு தகுதிபெறுவர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்ற இத்திட்டத்தின் மூலம் உதவியை பெற்றுக்கொள்பவர்கள், சிட்னியில் 7 லட்சம் டொலர்களுக்கு மேற்படாத விலையிலும் மெல்பனில் 6 லட்சம் டொலர்களுக்கு மேற்படாத வகையிலும் பிறிஸ்பனில் 4 லட்சத்து 75 ஆயிரம் டொலர்களுக்கு மேற்படாத வகையிலும் மாத்திரமே வீடுகளை வாங்கமுடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட பிரதேசங்களில் வீடு வாங்க விரும்புகிறவர்களுக்கு அதன் அடிப்படையிலான வீட்டு விலை வரையறை அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முதல் வீடு வாங்குவதற்கு ஐந்து வீத முன்பணம் இருந்தால் போதுமானது என்றால் கூட, மீதிப்பணத்தைக் அரசாங்கம் கடனாகவே அளிக்கிறது. இதனால் குடும்பங்களின் மீதான கடன்சுமை அதிகரிக்கும் என்ற அச்சமும், வீடுகளின் விலை குறையும் என்று உறுதியாகக் கூற இயலாது என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. கடன் வட்டி விகிதம் இன்னும் முடிவெடுக்கப் படவில்லை என்பது கூடுதல் தகவல்.

இதுதவிர 2018ஆம் ஆண்டில், சுமார் 110,000 ஆஸ்திரேலியர்கள் தங்களது முதல் வீடுகளை வாங்கியுள்ள பின்னணியில் ஆண்டுக்கு 10,000 பேருக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகின்றமையும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

-Australia.

Sources ;- SBS Tamil

Back to top button