செய்திகள்

குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை விரைவுபடுத்தப்பட்டுள்ளது – ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தேங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போது இந்நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக குடியுரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் David Coleman    கூறியுள்ளார்.


மேலதிக பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையடுத்து குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் David Coleman  தெரிவித்தார்.

இவ்வருடம் ஜுலை முதல் ஆகஸ்ட் இடையிலான இரண்டு மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு இதேகாலப்பகுதியில் ஒன்பதாயிரம் விண்ணப்பங்கள் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் David Coleman சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த ஒருவர்  அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 16 தொடக்கம் 19 மாதங்கள் எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இத்தாமதத்திற்கு கீழ்க்காணும் 3 காரணங்களை உள்துறை அமைச்சு பட்டியலிட்டிருந்தது.

  • 2010 தொடக்கம் 2018 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்காகியுள்ளது.
  • முன்னெப்போதும் இல்லாதவகையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், விண்ணப்பங்கள் அனைத்தும்  கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் பரிசீலிக்கப்படும் அதேநேரம் விண்ணப்பதாரியின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.
  • லேபர் ஆட்சிக்காலத்தில் படகுமூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய சுமார் 50 ஆயிரம் பேரில், நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பலர் தற்போது குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதால், அவர்களது விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு கூடுதல் காலமும் ஆளணி வளங்களும் தேவைப்படுகிறது. இது ஏனையவர்களின் விண்ணப்பங்களைப் பாதிக்கிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை தாமதமாகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கோரியுள்ள குடியுரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் David Coleman,  இயன்றவரை இச்செயற்பாட்டில் நிலவும் தாமதத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இதன் ஒரு அங்கமாகவே மேலதிக பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் கூறியுள்ளார்.
குடியுரிமை விண்ணப்ப பரிசீலனை விரைவுபடுத்தப்பட்டுள்ளது - ஆஸ்திரேலியா 1

Back to top button