செய்திகள்

இவர்களுக்கு ஏன் 2018 அமைதிக்கான நோபல் பரிசு?

இவர்களுக்கு ஏன் 2018 அமைதிக்கான நோபல் பரிசு? 1
2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மனித உரிமை ஆர்வலர்களுக்கு இம்முறை நோபல் பரிசு தரப்படுகிறது.
காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான  நாடியா முராத்தும் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இவர்கள்?  
நாடியா முராத் (Nadia Murad)
நாடியா முராத் 25 வயது பெண். ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் இனத்தைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலர். போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றவர். குறிப்பாக ஈராக்கில்  சிறுபான்மையினராக உள்ள யாசிதி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தீவிரமாக குரல் கொடுத்தவர்.
நாடியாவின் வாழக்கை மிகவும் சோகமானது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் சிரியா நாட்டின் எல்லையில் உள்ள சிஞ்சார் கிராமத்தை ஐஎஸ் அமைப்பின் ஆயததாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபொது யாசிதி ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்த ஆயுததாரிகள் யாசிதி பெண்களை பாலியல் அடிமைகளாக இழுத்துச் சென்றனர். முராத்தும் அவர்கள் கைகளில் சிக்கியதால் அவரது வாழ்க்கையும் தலைகீழானது.  
சிறைபிடிக்கப்பட்ட நாடியா வன்கொடுமைக்கு ஆளானார். மூன்று மாதங்கள் நாடியாவை அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். கொடூரமாக தாக்கினர். அடித்து துன்புறுத்தினர். செக்ஸ் அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களை விற்க ஐஎஸ் ஆயுததாரிக  சந்தையையும் நடத்தினர். நாடியாவின் 6 சகோதரர்களும், தாயும் ஐஎஸ் ஆயுததாரிகளால் கொல்லப்பட்டனர்.
உறவுகளை இழந்த பின்னரும் தன்னம்பிக்கையை கைவிடாமல், அங்கிருந்தபடியே யாசிதி பெண்களை ஐஎஸ் அமைப்பிடமிருந்து  விடுவிக்கும் பணிகளை ஒருங்கிணைத்தார். அவரது முயற்சியால் நூற்றுக்காண பெண்கள் விடுவிக்கப்பட்டனர். ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொண்டு நாடியா தனக்கு நேர்ந்த கொடூரத்தை முதன் முதலாக சொன்னபோது உலகமே அதிர்ந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் ஐநா அமைப்பின் தூதராகவும் நாடியா தற்போது பணியாற்றி வருகிறார்.
அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெனிஸ் முக்வேஜா  (Denis Mukwege)
டெனிஸ் முக்வேஜா 63 வயது மருத்துவர். காங்கோ எனும் ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்தவர். இவர் காங்கோ நாட்டின் உள் நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக கடுமையாக கடந்த பல ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தவர். “Doctor Miracle” (மருத்துவர் அற்புதம்) எனும் புனை பெயரில் மக்களால் அன்பாக அழைக்கப்பட்டு வருபவர். மேலும் போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பலருக்கு இலவசமாக மருத்து சேவை செய்து வருகின்றவர். அவரும் அவரது நண்பர்களும் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். போர் நிகழ்வுகளில் நடத்தப்படும் வன்புணர்வால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இவர் ஒரு நிபுணர் என்று பார்க்கப்படுகிறார்.
கடந்த பத்து ஆண்டுகளாகவே டெனிஸ் முக்வேஜாக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்று செய்திகள் வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு என்ற அறிவிப்பு வந்திருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை.



– நன்றி – sbs.com.au

Back to top button