Be where the world is going

பா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா?

0 229

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் 🙂

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில், பா.ஜ.க. தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை புகழ்ந்து பேசிய ரஜினி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவையும் வெகுவாக ஆதரித்துள்ளார். சட்டமன்ற தேர்தலின்போது நேரடி அரசியலில் ஈடுபடப்போவதாக சொல்லியுள்ள ரஜினிகாந்த், பா.ஜ.கவை வெகுவாக ஆதரிப்பது ஏன்?

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் கடந்த இரண்டாண்டு கால அனுபவங்கள் அடங்கிய `கவனித்தல் கற்றல் வழிநடத்துதல்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு இதில் வெகுவாகக் கவனிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் குறித்து சமீபத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வரவேற்றுப் பேசினார் ரஜினிகாந்த். “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மிஷன் காஷ்மீர் நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன். இதனை நீங்கள் கையாண்ட விதத்திற்கு தலைவணங்குகிறேன். குறிப்பாக, மக்களவையில் உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது. இப்போது மக்களுக்கு அமித் ஷா யார் என்று தெரிகிறது. அதனை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மோதியும் அமித் ஷாவும் கிருஷ்ணன் – அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்று எங்களுக்கு தெரியாது. அவர்களுக்குத்தான் தெரியும்” என்று குறிப்பிட்டார். ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்திற்குள்ளானது.

“எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்”

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடப்போவதாக நீண்டகாலமாகவே சொல்லி வருகிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அடுத்தடுத்து மறைந்துவிட்ட நிலையில், விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். அதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றும் துவங்கப்பட்டது.

தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் இருப்பதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலின்போது நேரடியாக அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பிறகு சில பொது விவகாரங்களில் கருத்துக்களைத் தெரிவித்தும் வந்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது, “எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” என அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இதற்குப் பிறகு, மக்களவைத் தேர்தலில் அவர் யாரையும் ஆதரித்து பிரசாரமோ, அறிக்கையோ வெளியிடவில்லையென்றாலும் “நதி நீர் பிரச்சனையைத் தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று மட்டும் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் காஷ்மீர் நடவடிக்கையை ஆதரித்தும் அமித் ஷாவைப் புகழ்ந்தும் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ஆனாலும்கூட, ரஜினிகாந்த் மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்து கருத்துத் தெரிவிப்பது இது முதல்முறையல்ல. சர்ச்சைக்குரிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது அதனையும் ஆதரித்தார் ரஜினி.

இதனையெல்லாம் வைத்து, வரவிருக்கும் நாட்களில் ரஜினி என்ன செய்வார் என்ற முடிவுக்கு ஒருவர் எளிதில் வந்துவிட முடியாது. ஒன்று, இதுபோல தொடர்ந்து பா.ஜ.கவின் நடவடிக்கைகளை ஆதரிக்கலாம். அல்லது பா.ஜ.கவிலேயே இணையலாம் அல்லது தனியாக கட்சி துவங்கி பா.ஜ.கவுடன் இணைந்து போட்டியிடலாம்.

ஆனால், பா.ஜ.கவில் இணைவது, தனிக் கட்சி துவங்குவது ஆகிய நடவடிக்கைகளில் ரஜினி உடனடியாக செய்வதற்கான எந்த சமிக்ஞையும் இப்போது இல்லை. தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்துவரும் ரஜினி, எப்போதாவது ஏதாவது ஒரு விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது என்ற அளவுக்கு மட்டுமே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.

ஆக ரஜினியின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

“ரஜினியின் அரசியல் என்பது தோல்விகரமான ஒன்றாகத்தான் இருக்குமென துவக்கத்திலிருந்தே சொல்லி வருகிறேன். ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தொண்டர் மட்டத்திலிருந்து கட்சியை கட்டி எழுப்புவதில் அவருக்கு விருப்பமோ, ஆர்வமோ இருப்பதாக தெரியவில்லை. வேறு ஏதாவது ஒரு கட்சி, வெற்றிபெற்று தன்னை அமரவைத்தால் வரலாம் என்ற எண்ணத்தில் இருப்பவரைப் போலவே தென்படுகிறார் ரஜினி” என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான ஆழி. செந்தில்நாதன்.

உண்மையிலேயே பா.ஜ.கவுக்கு ரஜினி மீது ஆர்வம் இருந்திருந்தால் தமிழக பா.ஜ.கவுக்கு அவரைத் தலைவராக கொண்டுவந்திருக்க முடியும். அப்படி அவர்கள் செய்யவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி ஒரு கட்சியை உருவாக்கி, அ.தி.மு.க., பா.ஜ.க., ரஜினியின் கட்சி எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்க முடியுமா என்பதெல்லாம் கேள்விகுரியது என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

ஆனால், ரஜினி மீது பா.ஜ.கவுக்கு ஆர்வமிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி. “இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடத்தப்பட்டதே ரஜினிக்காகத்தான் எனத் தோன்றுகிறது. இத்தனைக்கும் அழைப்பிதழில் அவரது பெயர்கூட இல்லை. இருந்தபோதும் அவர் பேச அழைக்கப்பட்டார். இதெல்லாம் ரஜினியை தம்பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்” என்கிறார் மணி.

ஆனால், ரஜினி கூறும் கருத்துகளை அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா என்பதில் சந்தேகமிருக்கிறது என்கிறார் அவர். “இதற்கு முன்பு பல தருணங்களில் தமிழக நலன்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருக்கிறார் ரஜினி. ஒரு முறை தமிழகத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துவிட்டு, பிறகு கர்நாடகத்தில் மன்னிப்புக் கேட்டார். இப்போதும்கூட காஷ்மீரில் அவருடைய படங்களுக்கு பெரிய சந்தை இருந்திருந்தால் அவர் இந்த நடவடிக்கையை ஆதரித்து கருத்துத் தெரிவித்திருக்க மாட்டார். எப்போதுமே அவருடைய திரைப்படங்களே அவருக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது” என்கிறார் மணி.

திரையுலகில் ரஜினிகாந்தின் போட்டியாளராகக் கருதப்பட்ட கமல்ஹாசன் இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஒன்றைத் துவக்கினார். நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்பதோடு 3.63 சதவீதம் வாக்குகளையே பெற்றார்.

இதுபோன்ற சூழலில் புதிதாக ஒரு கட்சியைத் துவங்கி அரசியலில் இறங்க ரஜினி விரும்புவாரா என்பது கேள்விக்குறிதான். “ரஜினியை இப்போதும்கூட பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக ஆக்கலாம். அவருக்கு உள்ள ரஜினி ரசிகர் மன்ற கட்டமைப்பு பா.ஜ.கவுக்கும் உதவும். ஆனால், நீண்டகால நோக்கில் அது ரஜினியை பலவீனமாக்கிவிடும். ரஜினிக்கு தன் அரசியல் குறித்து ஒரு எதிர்காலம் சார்ந்த நுணுக்கமான பார்வை இருக்க வேண்டும். ஆனால், அப்படி இருப்பதாகத் தெரியவில்லை” என்கிறார் செந்தில்நாதன்.

1990களின் துவக்கத்திலிருந்தே ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவாரா என்பது குறித்த கேள்வி நீடித்து வருகிறது. 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். பிறகு, அ.தி.மு.கவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். ரஜினிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மோதல் வெடித்தபோது, நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென வெளிப்படையாகக் கூறினார் ரஜினி.

 updates of this page based on virakesari.lk, bbc.com/tamil, cineulagam.com, hirunews.lk/sooriyanfmnews, etc…

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் 🙂

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More