ஆன்மிகம்

அத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வைக்கப்படும் தெரியுமா?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: “அத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வைக்கப்படும் என்று தெரியுமா?”

அத்திவரதரை கடந்த 47 நாட்களில் 1 கோடி பேர் தரிசித்து உள்ளனர். தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, அத்திவரதர் சிலை இன்று மீண்டும் கோவில் குளத்துக்குள் வைக்கப்படுகிறது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கடைசி நாளான நேற்று இரவு 9 மணி வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. நேற்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.

நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது.

இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும்.

அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Back to top button