செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி: கனடாவுக்கு குடிபெயர இதுதான் சரியான நேரமா?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனடிய நாடாளுமன்ற பொதுச்சபைக்கு (House of Commons) நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மொத்தமுள்ள 388 தொகுதிகளில் குறைந்தது 170 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே பெரும்பான்மை பெற முடியும்.

எனினும், எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியைவிட கூடுதலாக 36 தொகுதிகள், அதாவது 157 தொகுதிகளில் வென்றுள்ள லிபரல் கட்சி சிறுபான்மை ஆட்சியை அமைக்க உள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தல் கனடாவின் குடியேற்ற கொள்கையில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? கனடா குடியேறிகளின் புகலிடமாக மாறியது ஏன்?

திட்டமிட்டபடி, பத்து லட்சம் பேருக்கு மூன்றாண்டுகளில் நிரந்தர வசிப்புரிமை வழங்குவது சாத்தியமா? கனடியர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் நிலைக்கு குடியேறிகள் உயர்ந்தது எப்படி? போன்ற கேள்விகளுக்கான பதில்களை ஆராய்கிறது இந்த கட்டுரை.

குடியேறிகளின் நவீனகால புகலிடமா?

கனடாவின் தேர்தல் களத்தின் போக்கை உலகமெங்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உன்னிப்பாக கவனித்ததை மறுக்க முடியாது. அதற்கு முக்கிய காரணம் வெறும் அரசியலல்ல; வெற்றிபெறப்போகும் அரசியல் கட்சியால் கனடாவின் குடியேற்ற கொள்கையில் மாற்ற ஏற்பட்டுவிடுமோ என்கிற எண்ணமே காரணம் என்று பரவலாக கருதப்படுகிறது.

வேற்று நாட்டில் பிறந்தவர்கள் அதிகளவு வசிக்கும் நாடாக திகழ்ந்து வந்த அமெரிக்கா, கடந்த சில தசாப்தங்களாக தனது குடியேற்ற கொள்கையில் கொண்டு வந்த மாற்றங்களின் காரணமாகவும், குறிப்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் குடியேற்றத்துக்கு எதிரான போக்கின் காரணமாகவும் அங்கு சூழ்நிலை தலைகீழாக மாறி வருகிறது.

அதே நேரத்தில், தனது பெரும்பாலான எல்லையை அமெரிக்காவுக்கோடு பகிர்ந்து கொண்டுள்ள கனடா, குடியேறிகளின் நவீனகால புகலிடமாக மாறி வருகிறது. தொடக்கத்தில் பல்வேறு நாடுகளின் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை வரவேற்ற கனடா, தற்போது சர்வதேச அளவில் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் முன்னேறியவர்களும் குடிபெயர நினைக்கும் விருப்பத்திற்குரிய நாடாக உருவெடுத்துள்ளதாக கூறுகிறார் கனடாவை சேர்ந்த குடிவரவு வல்லுநர் நேரு குணரத்தினம்.

“கனடா குடியேறிகளை வரவேற்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வரும் பிறப்பு விகிதமும், நாட்டில் அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கையுமே முதலாவது காரணம். பரப்பளவில் ரஷ்யாவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடா தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதியை மட்டுமே கொண்டுள்ளது. இந்த பிரச்சனையை குடியேற்றத்தை அனுமதிப்பதன் மூலம் ஈடுகட்டும் பணியை ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், கனடா இரண்டு தசாப்தகாலத்திற்கும் அதிகமாக திறம்பட மேற்கொண்டு வருகிறது” என்று அவர் கூறுகிறார்.

நேரு குணரத்தினம்படத்தின் காப்புரிமைFACEBOOK
Image captionநேரு குணரத்தினம்

“கனடாவில் மக்கள் தொகை அதிகரிப்பதால் சேவைகளின் தேவையும் பெருகி வருகிறது. அதை நிறைவு செய்வதற்கு தேவையான பணியாட்களின் பற்றாற்குறையை ஈடுகட்டுவதற்காகவும் வெளிநாட்டினரை கனடா வரவேற்கிறது; இதுதான் இரண்டாவது காரணம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியே மூன்றாவது காரணமாக கருதப்படுகிறது. இதன்படி, தகுதிவாய்ந்த குடியேறிகள் கனடாவுக்கு வந்து புதிய தொழில்களை தொடங்குவதாலும், புதிய வேலைவாய்ப்புகளை பெருக்குவதினாலும், கல்வி போன்றவற்றில் முதலீடு செய்வதினாலும் நாட்டின் பொருளாதாரம் புதிய எல்லைகளை நோக்கி பயணிக்க முடியும் என்று கருதப்படுகிறது” என்று கூறும் குணரத்தினம் கனடாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிவரவு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கனடாவில் குடியேற விரும்புவர்களுக்கு ‘எக்ஸ்பிரஸ் என்ட்ரி’ என்ற புள்ளி அடிப்படையிலான திட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு, கனடாவில் நிரந்தர வசிப்புரிமை (Permanent Residency) வழங்கப்படும். அதன் மூலம், வாக்குரிமை நீங்கலாக கனடிய குடிமக்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

‘எக்ஸ்பிரஸ் என்ட்ரி’ திட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் உயர்ந்து வருகிறது. உதாரணமாக, 2018ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 92,231 பேர் கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்றுள்ளனர். இது கடந்த 2017ஆம் ஆண்டை விட 41% அதிகம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும், ‘எக்ஸ்பிரஸ் என்ட்ரி’ திட்டத்தின்கீழ், கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெறுபவர்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்று வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017ஐ விட கடந்த ஆண்டு 5,367 அதிகரித்து 41,675 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இரண்டாவது இடத்தை பெற்றுள்ள சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வித்தியாசம் 35,427 பேர்.

மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் குடியேறிகள் – சாத்தியமா?

“புலம்பெயர்ந்தோரும் அவர்களின் சந்ததியினரும் கனடாவுக்கு அளவிட முடியாத பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இந்நிலையில், நமது எதிர்கால வெற்றி என்பது தொடர்ந்து குடியேறிகளை வரவேற்று, அவர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கிறோம் என்பதை பொறுத்தே உள்ளது” என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் கனடிய நாடாளுமன்றத்தில் குடியேற்ற கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்போது கூறினார் அந்த நாட்டின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை துறைக்கான அமைச்சர் அஹ்மத் ஹுசைன்.

கனடாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அந்த அறிக்கையின்படி, வரும் 2021ஆம் ஆண்டுக்குள் கனடாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு குடியேற்ற அனுமதி வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், 2021ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 3,50,000 லட்சம் பேருக்கு கனடா வசிப்புரிமை வழங்க வேண்டும். இது அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு சதவீதம்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில், கனடாவில் பெரும்பான்மை கொண்ட அரசை அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது இந்த அறிக்கையை முன்வைத்த ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி.

இதன் மூலம், சிறுபான்மை லிபரல் அரசு, தனது திட்டங்களை எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்படும் முட்டுக்கட்டையை ஜஸ்டின் ட்ரூடோவால் எப்படி சமாளிக்க முடியும் என்று என்ற கேள்விக்கு பதிலளித்த நேரு குணரத்தினம், “கனடாவின் பிரதான கட்சிகளான லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் ஆகியவை குடியேற்றத்தில் ஒத்த கருத்தை கொண்டுள்ளன. உதாரணமாக, தற்போது கனடாவுக்கு குடியேறிகள் வருவதற்கு முக்கிய வழியாக உள்ள ‘எக்ஸ்பிரஸ் என்ட்ரி’ முறையை கன்சர்வேட்டிவ் கட்சி தலைமையிலான அரசுதான் 2015இல் அறிமுகப்படுத்தியது. பின்பு ஆட்சிக்கு வந்த லிபரல் கட்சி அதே முறையின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் முன்னெப்போதுமில்லாத அளவில் குடியேறிகளை வரவேற்று வருகிறது. அதே நிலையில், கனடாவில் குடியேறிகளுக்கு எதிரான கருத்து கொண்ட புதிதாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பீப்பிள்ஸ் பார்ட்டி ஆஃப் கனடா கட்சியின் தலைவர் மாக்சிம் பெர்னியர் கூட இந்த தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இதன் மூலம் கனடாவில் குடியேற்றத்தின் முக்கியத்துவத்தில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயும், வாக்காளர்களுக்கிடையேயும் நிலவும் ஒற்றுமையை புரிந்துகொள்ள முடியும்.”

எனவே, கனடாவை பொறுத்தவரை, பெரும்பான்மை அல்லது சிறுபான்மை அரசு என எவ்வித வேறுபாடுமின்றி, குடியேற்ற கொள்கை தொடர்பான விடயங்களில் வரும் ஆண்டுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று நேரு குணரத்தினம் கூறுகிறார்.

கனடாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கனடியர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் குடியேறிகள்

அமெரிக்கா உள்ளிட்ட குடியேறிகள் அதிகம் இருக்கும் அல்லது மக்கள் குடியேற விரும்பும் நாடுகளில் அவர்களுக்கு எதிராக உள்ளூர் மக்கள், அரசியல் கட்சிகளால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு ‘குடியேறிகளால் எங்களது வேலைவாய்ப்பு பறிபோகிறது’ என்பதுதான்.

எனினும், கடந்த ஏப்ரல் மாதம் கனடிய அரசின் தரவு பிரிவினால் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, பல வகைகளில் கனடாவை பிறப்பிடமாக கொண்டவர்களை விட குடியேறிகளே அந்நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தெரியவந்துள்ளது.

2013ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்தாண்டு தரவுகளை மையமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குடியேறிகளால் நடத்தப்படும் நிறுவனங்கள், கனடாவில் பிறந்தவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களை விட அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, அமெரிக்கா, ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் குடியேறிகள் தொடங்கும் நிறுவனங்களைவிட கனடாவில் செயல்படும் நிறுவனங்கள் அதிக ஆண்டுகள் நிலைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

“இந்த ஆய்வின் தகவல்கள், கனடிய பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்த தொழில்முனைவோரின் பங்கைப் புரிந்துகொள்வதற்கான பயனுள்ள முதல் படியை வழங்குகிறது” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

குடியேறிகளின் வளர்ச்சிக்கு காரணம் என்ன?

கனடாவில் வேலையை தேடுபவர்கள் என்ற நிலையிலிருந்து கனடியர்களுக்கு வேலையை அளிப்பவர்கள் என்ற நிலையை குடியேறிகள் அடைந்தது எப்படி சாத்தியமானது என்று தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும், கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியருமான செல்வகுமாரிடம் கேட்டபோது, “கனடாவுக்குள் அகதிகள், மாணவர்கள், பணியாட்கள் என பல்வேறு விதமாக வந்தவர்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடுமையாக உழைத்தார்கள்; அது இன்னமும் கூட தொடருகிறது. குறிப்பாக, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்கள், தொடக்க காலத்தில் ஒரே வீட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தங்கி, தங்களுக்கான சரியான பாதையை தெரிவு செய்து, கடுமையாக உழைத்ததன் காரணமாக இன்று அவர்களில் பலர் தத்தமது துறைகளில் சிறப்புமிக்க நிலைக்கு உயர்ந்துள்ளனர்.”

பேராசிரியர் செல்வகுமார்படத்தின் காப்புரிமைFACEBOOK
Image captionபேராசிரியர் செல்வகுமார்

உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் குடியேற்றத்துக்கு தங்களது கதவுகளை திறந்து வைத்திருந்தாலும், அதில் கனடா எந்த வகையில் வேறுபட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த செல்வக்குமார், “பிறந்த நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளை கழித்த பின்னரே பெரும்பாலானோர் மற்ற நாடுகளுக்கு புலம்பெயருகின்றனர். அப்படி மற்ற நாடுகளுக்கு செல்லும்போது, தாய்நாட்டில் பழகிப்போன கலாசாரம், உறவுகள், உணவு, சமூக கட்டமைப்பு, காலநிலை உள்ளிட்ட எல்லாமுமே வேறுபட்டிருப்பது பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். அந்த வகையில், கனடாவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் தத்தமது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து வாழும் வாய்ப்புள்ளதால் அது குடியேறிகளுக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கிறது. அதுமட்டுமின்றி, புலம்பெயர்ந்தவர்களால் நிரம்பிய கனடாவில், அரசாங்கம் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் முக்க்கியத்துவம் அளிக்கிறது. உதாரணமாக, தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், ‘தமிழ் பாரம்பரிய மாதமாக’ அரசால் அறிவிக்கப்பட்டு, நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது” என்று கூறும் இவர் கடந்த 35 ஆண்டுகளாக குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருவதுடன், அந்நாட்டு குடியுரிமையும் பெற்றுள்ளார்.

கனடாவின் பொருளாதாரத்திற்கு குடியேறிகளின் தேவை முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்நாட்டின் பிரதான கட்சிகளும், குடிமக்களும் நன்கு உணர்ந்துள்ளதாக கூறுகிறார் பேராசிரியர் செல்வக்குமார். “உலகம் முழுவதும் குடியேறிகளை சுமையாக பார்க்கும் சூழ்நிலை நிலவி வந்தாலும், கனடாவில் அவர்களின் முக்கியத்துவத்தை பல்வேறு தரப்பினரும் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக, அரசினால் நிலையான கொள்கையினையும், மக்களால் திறந்த மனப்பான்மையுடனும் செயல்பட முடிகிறது. மிக குறுகிய காலத்தில் இந்த நாட்டில் குடியேறிகள் வாழ்வின் சிறந்த நிலைக்கு உயர்ந்து சாதிக்கின்றனர். மற்ற மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில், புலம்பெயர்ந்தவர்கள் சந்திக்கும் இனவெறி, பாகுபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் கனடாவில் கணிசமாக குறைந்து வருவதை எனது 35 ஆண்டுகளாக அனுபவத்தில் உணர்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

மேலும், கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்றுள்ளவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது செலுத்தவேண்டிய கட்டணத்தை நீக்கப்போவதாக ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாய் அளித்துள்ளதாகவும், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அது குடியேறிகளின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் மற்றொரு விடயமாக உருவெடுக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

 

sources : bbc

Back to top button