ஏனையவை

பிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது.

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து தமிழ்: பிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது – இயக்குநர் அமீர்

எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.

அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்று இயக்குநர் அமீர் பேசியதாக தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர், சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்த பின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் போகும் போது உங்களுடன் பயணித்தவர்களையும் உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும் என்று பேசியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தினமணி: ‘பசுமை வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது’

பசுமை வழிச்சாலை திட்டம்

சென்னை – சேலத்தை இணைக்கும் ரூ. 10 ஆயிரம் கோடியிலான 8 வழிச்சாலை பசுமை வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதைக் கருத்தில் கொள்ளாமல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் வாதிடப்பட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அத்துடன் 35 நில உரிமையாளர்களும், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, எம்.எம். சந்தானகௌடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் சுமார் 2 மணி பயண நேரம் குறையும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பு தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குதிரைக்கு முன் வண்டியைச் செலுத்துவதற்கு சமமாகும். அதேநேரத்தில், இந்தத் திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்.

இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி, திட்டத்தின் இடம் மாற்றம் ஆகிய இரண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. அதே நேரத்தில் சென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இவை அனைத்துக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, இந்தத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது என்றார்.

தினமலர்: ‘ரூபாய் நோட்டுகளின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது ஏன்?’

ரூபாய் நோட்டுபடத்தின் காப்புரிமைMINT

‘ரூபாய் நோட்டுகளின் வடிவத்தை அடிக்கடி மாற்றுவது சரியில்லை. குறிப்பாக, பார்வையற்றோர், அதை அடையாளம் காண்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்’ என, மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளின் வடிவம் அடிக்கடி மாற்றப்படுவதை எதிர்த்து, பார்வையற்றோருக்கான தேசிய சங்கம், மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி, பிரதீப் நந்த்ரஜாக் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வடிவத்தை அடையாளம் காண்பதற்கு, பார்வையற்றவர்களுக்கு அதிக நாட்களாகும். அடிக்கடி ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வடிவத்தை மாற்றி அமைப்பது சரியானதல்ல. இதில், எந்த பிரச்னையையும் மனதில் கொள்ளாமல், அதிகாரம் உள்ளது என்பதற்காக, அடிக்கடி மாற்றலாமா.கள்ள நோட்டு புழக்கத்தை குறைப்பதற்காகவே, இவ்வாறு மாற்றுவதாக கூறுவதை ஏற்க முடியாது.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தின்போது, அனைத்து நோட்டுகளும் திரும்பி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தான் கூறியுள்ளது. இந்த வழக்கில் பதிலளிக்க, பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் அவகாசம் கேட்கிறீர்கள். உங்களிடம், உண்மையான, உறுதியான பதில் இருந்திருந்தால், இந்த நேரம் தாக்கல் செய்திருப்பீர்கள்.இவ்வாறு, அமர்வு கூறியது. அதையடுத்து, பதில் அளிக்க, ரிசர்வ் வங்கிக்கு, இரண்டு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

இவ்வாறு அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி இந்து :ஏமாற்றம் அளித்த இந்தியாவின் பேட்டிங்

ஏமாற்றம் அளித்த இந்தியாவின் பேட்டிங்படத்தின் காப்புரிமைRANDY BROOKS/AFP/GETTY IMAGES

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் வியாழக்கிழமையன்று தொடங்கியது குறித்த செய்தியை தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் தனது அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.

மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக சூழல் இருந்தது.

மாயங் அகர்வால் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் 5 மற்றும் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருநாள் போட்டிகளில் தொடர் நாயகனாக அறிவிக்கபப்ட்ட இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கே. எல். ராகுல் 44 ரன்கள் எடுக்க, ரஹானே மட்டும்தான் இந்திய பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தார். 10 பவுண்டரிகளின் துணையுடன் அவர் 81 ரன்கள் எடுத்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் போட்டியில் விளையாடிய இந்தியாவின் பேட்டிங் முதல் நாளில் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது.

ஆட்டத்தின் பிறபகுதியில் தொடர்ந்து குறுக்கிட்ட மழை 68.3 ஓவர்களுக்கு பிறகு அதிகமானதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 68.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய 203 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது.

Back to top button