செய்திகள்

மோதி – ஷி ஜின்பிங் இன்றைய சந்திப்பு – 12 முக்கிய தகவல்கள்

இரண்டாவது நாளாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இன்று (சனிக்கிழமை) சந்த்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று இதுவரை நடந்தவற்றை 12 தகவல்களாக தொகுத்துள்ளோம்.

  • மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோதி, அங்குக் கிடந்த குப்பைகளை 30 நிமிடங்களுக்கும் மேலாக அகற்றினார். “நாம் நம்முடைய பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வோம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் பிரதமர்.
  • கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலை காலை 10.20க்கு வந்தடைந்த சீன அதிபர் ஜின்பிங்கை ஹோட்டல் வாசலில் காத்திருந்து வரவேற்ற பிரதமர் நரேந்திர மோதி, கூட்டம் நடைபெறும் அரங்குக்கு பேட்டரி காரில் அழைத்துச் சென்றார்.
  • மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் எனப் பிரதமர் மோதி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்று தமிழில் பேசினார்.
  • நரேந்திர மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையே பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் குண்டு துளைக்காத கண்ணாடி பேழை அறையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • இன்று நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளைச் சேர்ந்த தலா 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மோதி மற்றும் ஷி ஜின்பிங்குடன் அதிகாரிகள் இணைந்த பேச்சுவார்த்தையில், இந்தியத் தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே ஆகியோர் உள்ளனர்.
  • சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே 2,000 ஆண்டுகளாக ஆழமான கலாசார வர்த்தக உறவுகள் இருப்பதாக மோதி கூறினார். மாமல்லபுரம் பயணம் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்துள்ளது. இருநாடுகளிடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு ஏற்படும் என மோதி தெரிவித்திருந்தார்.
  • ”உங்களின் விருந்தோம்பல் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நானும் எனது சகாக்களும் இதனை மிகவும் வலுவாக உணர்ந்திருக்கிறோம். இது எனக்கும், எனது நாட்டு அதிகாரிகளுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்” எனச் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.
  • தஞ்சாவூர் சரஸ்வதி ஓவியம் பரிசளிக்கப்பட்டதோடு சிறுமுகை நெசவாளர்களால் நெய்யப்பட்ட சிவப்பு நிற பட்டு சால்வையை சீன அதிபருக்குப் பரிசளித்தார் நரேந்திர மோதி. அதில் ஷி ஜின்பிங்கின் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
  • பகல் ஒரு மணிக்கு சென்னை கோவளம் விடுதியிலிருந்து ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையத்திற்குப் புறப்பட்டார். அங்கிருந்து நேபாளம் செல்கிறார் ஜின்பிங்.
  • இந்தியா – சீனா உறவில் இந்த ‘சென்னைக் கனெக்ட்’ புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது என மோதி குறிப்பிட்டார். “நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்.” என நரேந்திர மோதி. தமிழில் ட்வீட் பகிர்ந்துள்ளார்.
  • சீனா வருமாறு இந்தியப் பிரதமருக்கு ஷி ஜின்பிங் அழைப்புவிடுத்ததாகச் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.
  • நேற்று gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டாகியது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழி பதிவை ஹாஷ்டேகில் பயன்படுத்தினர். இன்று ட்விட்டர் சென்னை டிரெண்ட்ஸில் DontgobackModi என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகியது. இந்த ஹாஷ்டேகில் சுமார் 11 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டன.

Sources : – BBC Tamil

Back to top button