செய்திகள்

ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல் உள்ளமை தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை தொடர்பாக இன்று தமது உத்தியோகப்பூர்வ அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் சமர்ப்பித்தார்.

அதனைத்தொடர்ந்து உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தன. இதன்போதே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை பாராட்டிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி, பாதிக்கப்பட்டோர் தொடர்பாக நிலையான மற்றும் துரித செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வது அவசியமென வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிலைமாறுகால நீதி பொறிமுறையை தாமதமின்றி செயற்படுத்த வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி குறிப்பிட்டார். இவை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுவது அவசியமெனவும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இவ்விடயங்கள் செயற்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயயற்படுமென இதன்போது குறிப்பிட்டார்.

ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி 1

Back to top button