செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து 5000 பேரை பணிக்கமர்த்த ஆஸ்திரேலிய அரசு திட்டம்!

வெவ்வேறு நாடுகளிலுள்ள துறைசார் தேர்ச்சிபெற்ற ஐயாயிரம் பேரை ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு உள்வாங்கும் புதிய திட்டமொன்றை ஆஸ்திரேலிய அரசு ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின்பிரகாரம், குறிப்பிட்ட நாடுகளுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பவுள்ள ஆஸ்திரேலிய அரசு, அந்த நாடுகளிலுள்ள தேர்ச்சிபெற்றவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதற்கான நேர்முகத்தேர்வுகளை நடத்தவுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் David Coleman தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் உள்துறை அமைச்சினால் அடையாளம் காணப்படுகின்ற பணிகளுக்கான ஆட்களை குறிப்பாக தொழிநுட்ப துறைசார்ந்த நிபுணர்களைப் பெறுவதற்கு வெளிநாடுகளில் இந்த நேர்முகத்தேர்வு நடைபெறும் என்றும், அந்தத்துறைகளில் வந்து பணிபுரிவதற்கு மிகத்திறமையான வேலையாட்கள் வெளிநாடுகளிலிருந்து உள்வாங்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வருடமொன்றுக்கு ஆஸ்திரேலியா உள்வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டவர்களில் ஐயாயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உள்வாங்கப்படும் சிறப்பு தேர்ச்சிபெற்றவர்களின் மூலம் ஆஸ்திரேலியாவின் வேலைத்துறைகள் மேம்படுத்தப்படும் என்றும் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் நிபுணர்களினால் உள்நாட்டு திறனாளர்களுக்கும் பயன்கிடைக்கும் என்றும் குடிவரவு அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஜேர்மனிக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பியுள்ள ஆஸ்திரேலிய அரசு அங்கிருந்து உச்சத்திறன்கொண்ட வேலையாட்களை நேர்முகத்தேர்வு செய்யவுள்ளது என்று கூறப்படுகிறது.

அதன்பிறகு, அமெரிக்கா, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளுக்கு அரசுப்பிரதிநிதிகள் செல்லவுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்களை அமைச்சர் David Coleman தெரிவித்தார்.

Back to top button