Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன – ஹக்கீம் விளக்கம்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை கண்டறிவதில் தடையாக உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் மீது முன்வைகபட்ட குற்றச்சாட்டை அடுத்து  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்தனர். அத்துடன் குற்றவாளிகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கை இல்லாததால் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதகாலத்தில் உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் அவர்கள் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் நேற்று காலையில் கூடி ஆராய்ந்ததுடன் நண்பகல் அளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர். 
அதன் பின்னர் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவருமாக நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.  
இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவிக்கையில், 
தற்போதுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து முஸ்லிம் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவருடனும் நீண்ட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினோம். 
அதனை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் என அனைவரும் எமது பதவிகளை துறக்க தீர்மானம் எடுத்துள்ளோம். 
இந்த தீர்மானம் எவரதும் அழுத்தத்தின் காரணமகாக எடுக்கவில்லை. மாறாக தற்போதுள்ள நிலைமையை கையாள எமக்கு உள்ள வழிமுறையையே நாம் கையாண்டுள்ளோம். 
அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். குறிப்பாக கடந்த 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலை அடுத்து அது குறித்த விசாரணைகளை சுயாதீனமாக நடத்த விடாது தடுக்க அமைச்சர்கள் சிலர் தடையாக உள்ளதாகவும் இந்த செயற்பாடுகளில் முஸ்லிம் பிரதிநிதிகளின் தொடர்புகள் இருப்பதாகவும் ஒரு சில அமைப்புகள் குற்றம் சுமத்தி வருவதுடன் அதனை காரணமாக வைத்துக்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்சிகள் இடம்பெற்று வருகின்றது. 
ஆகவே இதற்கு இடமளிக்காது சுயாதீனமாக உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே நாம் பதவி துறக்கின்றோம். 
இன்று நாடு பாரிய அனர்த்தத்திற்கு தள்ளப்படும் அபாயநிலை உருவாகியுள்ளது. எமது மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத அச்ச சூழல் உருவாகி வருகின்றதை எம்மால் தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது. 
அதேபோல் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட எமது சமூகத்தைச் சார்ந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுகொடுக்க சகல உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நாம் பூரணமாக வழங்கியுள்ளோம். 
குறிப்பாக கூறுவதாயின் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் எமது சமூகத்தை சார்ந்த சிலரால் முன்னெடுக்கப்பட்டாலும் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தணடனையை பெற்றுகொடுக்க வேண்டும் என்பதில் எமது சமூகம் உறுதியாக இருந்தது. 
அவ்வாறு இருந்தும் கூட அடிக்கடி நெருக்கடிகளை கொடுத்து இந்த நாட்டில் மிக மோசமான இனவாத கருத்துக்களை பரப்பும் சக்திகள் வெறுப்பூட்டும் பேசுக்கள் என்பவற்றை பார்த்து நாம் அச்சப்படுகின்றோம். 
இந்த அச்ச சூழலில் இருந்து நாடு விடுபட வேண்டும். இந்த நாட்டில் உள்ள சகல மக்கள் இடையில் நல்லிணக்கம் உருவாக வேண்டும். சர்வதேச ரீதியில் உள்ள நன்மதிப்பு பாதிக்கப்படக்கூடாது. அவ்வாறு இருக்கையில் எமது தரப்பில் ஒரு சிலருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை முழுமையாக கண்டறியப்பட வேண்டும். அதற்கான அவகாசத்தை வழங்குவது எமது கடமையாகும். 
இன்று மிக சிறிய, பயங்கரவாதத்துடன் தொடர்பு இல்லாத எமது மக்கள் பலர் தடுப்புக்கவளில் உள்ளனர். அவர்களுக்கான நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் அவதானமாக உள்ளோம். இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்துடன் தொடர்பில் இல்லாத சகலரையும் விடுவிக்க வேண்டும், அதேபோல் மக்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை மாத்திரம் தீவிரவாதிகள் என கூறிவிட முடியாது. இன்று பயங்கரவாதத்திற்கு எதிராக பேசும் நபர்கள் கூட தீவிரவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அதேபோல் எங்களில்  ஒரு சிலருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுக்கள்  இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து ஒரு நிலைபாட்டுக்கு வரவேண்டும். உண்மையில் எம்மில் சிலர் குற்றவாளிகள் என்றால் அதனை நிரூபிக்க முடிந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அதில் எமது தரப்பில் எந்த தடையும் ஏற்படாது. இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் பலிக்கடாவாக ஆக்கபடுவது தடுக்கப்பட வேண்டும். அதேபோல் இந்த நாடு வெகு விரைவில் சமாதான பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான நகர்வுகளுக்கு நாம்  ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம். இந்த விசாரணைகள் ஒருமாத காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தொடர்ந்தும் இந்த சந்தேக நிலைமை இருந்தால் இந்த நாட்டினை குழப்பும் சக்திகளுக்கு நாட்டில் மிகப்பெரிய இரத்தக் களரியை உருவாகும் பின்புலம் உருவாக்கிவிடும். 
அந்த அச்சம் எல்லோர் மத்தியிலும் உள்ளது. அதேபோல் இந்த விசாரணைகளை நடத்துவதில் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே இந்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கி உடனடியாக ஒருமாத காலத்தில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும். 
ஆகவே இந்த விசாரணைகளுக்கு எமது பூரண ஒத்துழைப்புகளை வழங்கி சுயாதீனமாக ஒரு தீர்வு எட்டப்பட நாம் இடமளித்துள்ளோம். அதேபோல் அரசாங்கதின் பின்வரிசையில் இருந்து இந்த அரசாங்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்போம். அமைச்சுப்பதவிகளை நாம் துறந்தாலும் கூட அரசாங்கத்தை கொண்டுநடத்தும் சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என்றார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: