செய்திகள்

இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபரின் நோக்கம் என்ன? அவருக்கு என்ன லாபம்?

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து முதல்முறையாக இந்தியா வரும் அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வரும் திங்கட்கிழமையன்று டிரம்ப் வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக பயணிக்க உள்ள டிரம்பை ஆயிரக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் இருந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைக்கிறார்.

அகமதாபாத்தில் டிரம்ப் இருக்கவுள்ள மூன்று மணி நேரத்திற்காக மொத்தம் 800ல் இருந்து 850 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படும் என்று குஜராத் அரசு அதிகாரிகள் கணக்கிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

இந்தியாவுக்கு வரவுள்ள அதிபர் டிரம்பின் நோக்கம்தான் என்ன?
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

மந்தநிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கும் சூழலின் மத்தியில்தான் டிரம்ப் வருகை இருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு இது ஒர் அரசியல் ஆதாயமாக அமையும் என்கிறார் ப்ரூக்கிங்க்ஸ் திங்-டேங் நிறுவனத்தின் இயக்குநர் தன்வி மதன்.

“அனைத்து புகைப்படங்களிலும் உலகின் மிக சக்தி வாய்ந்த தலைவர் ஒருவருடன் மோதி இருப்பார்” என்கிறார் அவர்.

இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய கொள்கையின் ஒரு பகுதிதான் அவர் இந்தியா வருவது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்தியா வருவதால் அமெரிக்க அதிபருக்கு என்ன லாபம் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. நீண்ட பயணங்களை விரும்பாதவர் என்று அறியப்படும் டிரம்ப், இந்தியா வரை ஏன் வர வேண்டும்?

அமெரிக்க வாழ் இந்திய வாக்காளர்களை ஈர்ப்பதற்காகவா?

இந்தியாவில் கடினமான கேள்விகள் கேட்கப்படாது என்பதால், ஒரு இனிமையான பயணமாக டிரம்பிற்கு இது இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

2020 இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் இருப்பதால், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த பயணத்தை டிரம்ப் மேற்கொள்கிறார் என்றே பெரிதும் பேசப்படுகிறது.

இந்தியாவுக்கு வரவுள்ள அதிபர் டிரம்பின் நோக்கம்தான் என்ன?
படத்தின் காப்புரிமை THOMAS B. SHEA / GETTY

2016ல் நடந்த அதிபர் தேர்தலில் வெறும் 16 சதவீத அமெரிக்க வாழ் இந்தியர்களே டிரம்பிற்கு வாக்களித்தனர் என்று தேசிய ஆசிய அமெரிக்க கணக்கெடுப்புகூறுகிறது.

“அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு, வரி விதிப்பை குறைப்பது, அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைப்பது போன்றதில் எல்லாம் நம்பிக்கையில்லை. அவர்கள் சமூக நலனுக்காக செலவழிப்பதை விரும்புபவர்கள்” என்கிறார் இந்த கணக்கெடுப்பை நடத்தியதில் ஒருவரான கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொது கொள்கை பிரிவின் பேராசிரியர் கார்த்திக் ராமகிருஷ்ணன்.

“இந்தியாவில் இருந்து வரும் காணொளிகள், டொனால்டு டிரம்ப் அனைத்து நாடுகளிலும் வரவேற்கப்படுகிறார் என்ற தோற்றத்தை அளிக்கும். சர்வதேச அளவில் அமெரிக்காவின் மரியாதை குறைந்துள்ளது என சில முடிவுகள் வெளியான நிலையில், இந்த நிகழ்ச்சி நடப்பது அமெரிக்காவை டிரம்ப் சிறப்புமிக்க நாடாக்கியுள்ளார் என்ற தோற்றம் ஏற்படும்” என்று தன்வி மதன் கூறுகிறார்.

வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு ஒப்பந்தம் 160 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

டிரம்பின் இந்திய வருகையின் முக்கிய நோக்கம் பல நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத்தான் என்று கூறப்படுகிறது.

இது டிரம்பிற்கு மேலும் ஒரு முக்கிய தருணமாக அமையலாம். ஆனால், அந்த நம்பிக்கை சற்று குறைந்து கொண்டே வருகிறது.

உயரும் வரி விதிப்புகள், மருத்துவ உபகரணங்கள் மீதான விலை கட்டுப்பாடு மற்றும் இணைய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை போன்ற விவகாரங்கள் குறித்து அமெரிக்கா கவலைக் கொண்டுள்ளது.

“வரையறுக்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தானால்கூட, இது இரு நாடுகளுக்குமே ஒரு முக்கிய சமிஞ்சையாக இருக்கும். இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுமே தங்கள் வர்த்தம் உயர வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதால், பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியும்” என்கிறார் அமெரிக்க இந்திய தொழில் அமைப்பின் தலைவர் நிஷா பிஸ்வால்.

பாதுகாப்பு

டிரம்ப் இந்தியா வரும்போது, பாதுகாப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

‘இடத்தை காலி செய்யுங்கள்’ – Motera families get eviction notice | Trump India Visit 2020

கடற்படைக்காக அமெரிக்கா இந்தியாவிற்கு விற்க உள்ள ஹெலிகாப்டர் தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கலாம்.

பல நாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க இந்தியா முயற்சி செய்கிறது. ரஷ்யா மற்றும் பிராண்ஸ் நாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியுள்ள இந்தியா, இதுவரை அமெரிக்காவிடம் இருந்து பெரிய ஏதும் வாங்கியதில்லை என்று ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

சீனா

பல காலமாகவே சீனாவிடம் கடுமையாக இருந்து வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

சீனா – இந்தியா வர்த்தக போர் தங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கவலைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதே சமையம் சீனாவும் அமெரிக்காவும் மிகவும் நெருக்கமாக இருந்தால் இந்தியா தனியாகிவிடும்.

டிரம்ப் – மோதி உறவு

கடந்த 8 மாதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்தியப் பிரதமர் மோதியும் ஐந்தாவது முறையாக தற்போது சந்திக்க உள்ளனர்.

இருவரும் ஒருவரையொருவர் ‘நண்பர்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள். இருவரும் அணைத்துக் கொள்வது போன்று பல புகைப்படங்கள் உள்ளன.

டிரம்ப் - மோதி உறவு
படத்தின் காப்புரிமை BRENDAN SMIALOWSKI/GETTY IMAGES

“இந்தியா எங்களை சரியாக நடத்துவதில்லை. ஆனால், பிரதமர் மோதியை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப் கூறியிருந்தார்.

அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட உறவு குறித்து பலரும் பேசுகிறார்கள்.

“முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போது டிரம்ப் என இருவரிடமும் நல்ல உறவை வைத்திருந்த வேறு தலைவர் யாரும் என் நினைவிற்கு வரவில்லை” என்கிறார் பிரதமர் மோதியின் ஆலோசனைக்குழுவில் இருக்கும் கர்ட் கேம்ப்பெல்.

தெளிவான நோக்கங்கள் இல்லாமல்தான் டிரம்ப் வருகை திட்டமிடப்பட்டது என்றும் இதில் என்ன நடக்கும் என்பதை இனிதான் பார்க்க வேண்டும் என்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பிரிவு பேராசிரியராக இருக்கும் ஜோஷுவா வைட் கூறுகிறார்.

Back to top button