Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

ஒரு ரூபாய்க்கு அர்ச்சனை! நல்லூர் கந்தசுவாமி கோயிலின் சிறப்புகள்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

ஈழமணி திருநாட்டின் மணிமகுடமாய் விளங்குகின்ற யாழ்ப்பாணம் என்றாலே நினைவிற்கு வருவது நல்லூர் கந்தசுவாமி கோயில்.

வரலாற்றுச் சிறப்புமிக்க முருக வழிபாட்டுத் தலங்களில் யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முக்கியமானதும் தனித்துவம் வாய்ந்ததும் ஆகும்.

கோட்டை இராஜ்ஜியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனாகிய செண்பகப் பெருமான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலப்பகுதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

இலங்கையின் வடபகுதியைத் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தபோது யாழ்ப்பாண இராஜ்ஜியத்துக்கு நல்லூர் நகரமே இராசதானியாக அமைந்திருந்தது.

அக்காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் பக்திக்கும்,வழிபாட்டுக்கும் உரிய ஆலயமாக இவ் ஆலயம் திகழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. சிங்கைப் பரராசசேகரன் ஆட்சிக் காலத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை நடு நாயகமாகக் கொண்டு நான்கு எல்லைகளிலும் நான்கு ஆலயங்கள் கட்டப்பட்டன.

வடக்கே சட்ட நாதர் கோயிலும், கிழக்கே வெயிலுகந்தப் பிள்ளையார் கோயிலும், தெற்கே கைலாசநாதர் கோயிலும், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயிலும் அமைந்து காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இந்த ஆலயத்தை ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாஸ்திர விதிக்கமையவும் மாற்றியமைத்து இன்றைய நிலைக்குக் கொண்டு வர வித்திட்டவர் நல்லை நகர் நாவலர்.

ஈழத் திருநாட்டிலே கோயில் கொண்டுள்ள கதிர்காமக் கந்தனை கற்பூரக் கந்தன் என்றும், சந்நிதி முருகனை அன்னதானக் கந்தன் என்றும், மாவைக் கந்தனை அபிசேகக் கந்தன் என்றும் அழைப்பது போல நல்லூர்க் கந்தனை அலங்காரக் கந்தன் என்று அழைக்கும் மரபு நீண்ட காலமாக நிலவி வருகின்றமை சிறப்பானது.

ஆலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப்பெருமானின் திருவுருவத்திற்கு பதிலாக ஞானசக்தியாகிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.

இலங்கையிலேயே ஒரே ஒரு சைவ ஆதீனமாக விளங்கும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆலயத்தின் மேற்குப் புறமாக அமைந்துள்ளது.

ஈழத்தின் தலைசிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும் அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திரு வீதியும் திகழ்கின்றது.

ஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் நல்லூர்க் கந்தன் ஆலயமாகும். இது ஈழத்துக் கோயில்களில் வேறெங்கும் காண முடியாத சிறப்பு ஆகும்.

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள், பிரபலங்கள் மாத்திரமன்றி எந்தவொரு நாட்டின் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் ஆலயத்துக்கு வருகை தந்தாலும் குறிக்கப்பட்ட நேரத்திற்கே ஆலயம் திறக்கப்படுவதுடன், பூஜை வழிபாடுகளும் வழமையாக இடம்பெறும். எவருக்கும் ஆலயத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.

ஆண்கள் பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் அனைவரும் தத்தமது மேலங்கிகளைக் கழற்றி விட்டு ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பது பொது விதி.

நாள்தோறும் இங்கு ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன. வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் மிகப்பலர்

ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன.

ஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சம்.

நல்லூர்க் கந்தன் மகோற்சவம் ஆவணி அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலும் மட்டுமே 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றன.

மகோற்சவ நாட்களில் 55 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றுள் கொடியேற்றம், திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாச வாகனம், சப்பறம், தேர், தீர்த்தம், பூங்காவனம் என்பன முக்கியமானவை.

ஆலய மகோற்சவ காலங்களில் பெரும் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமின்றி புலம்பெயர் தேசங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.

ஆலயத் தேர்,தீர்த்த உற்சவ நாட்களில் ஆயிரம் ஆயிரம் அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், காவடிகள் எடுத்தும், எண்ணிலடங்கா மாதர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும், அடியழித்தும் வழிபடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைப்பன.

மகோற்சவ காலத்தில் தினம் தோறும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லை ஆதீன மண்டபம், நல்லை ஆதீனக் குருமூர்த்த ஆலய மண்டபம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், யாழ்.சின்மயா மிஷன் நிலையம் ஆகியவிடங்களில் மாலை வேளைகளில் ஆன்மீக அருளுரைகளும், தெய்வீக இசையரங்கு நிகழ்வுகளும், ஆன்மீக நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

நல்லூர் தேரடிக்கு அருகாமையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று நாயன்மார் குருபூஜை மணிமண்டபம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள முத்துத்தம்பி மணி மண்டபம் என்பவற்றில் தினம் தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: