செய்திகள்

கார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை

ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுவன் காரை நிறுத்தி வைத்திருந்தபோது உள்ளூர் நேரப்படி, இன்று, புதன்கிழமை, அதிகாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் அதிகாரிகளைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டு அழுத்துள்ளான்.

காரை ஓட்டும்போது காரின் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டதுடன், காரின் பின்புறம் ஒரு சிறிய எச்சரிக்கை முக்கோணம் ஒன்றையும் அச்சிறுவன் மாட்டியுள்ளான்.

காவல் துறையினரிடம் தாம் கொஞ்ச தூரம் மட்டுமே ஓட்ட விரும்பியதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள ஜோஸ்ட் நகரில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.25 மணிக்கு தங்கள் மகன் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக அவனது அம்மா காவல் துறைக்கு தகவல் அளித்தார்.

பின்னர் சுமார் 1.15 மணியளவில் அந்தச் சிறுவனை சாலையோரம் அவனது தாய் கண்டுபிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் தனியார் இடங்களில் அந்தச் சிறுவன் காரை ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக வாகனத்தை ஓட்டியது தமக்கு உடல்நலமின்மையை உண்டாக்கியதாகவும் அதனால் காரை நிறுத்தி விட்டதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

இந்த சம்பவத்தில் உயிர் மற்றும் பொருள் இழப்புகள் எதுவும் நடக்கவில்லை என காவல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button