செய்திகள்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார் ராகுல் காந்தி

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி, குலாம் நபி அசாத், திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி அசாத், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திமுகவின் திருச்சி சிவா, ஷரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்குச் சென்றனர்.

இவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, அங்கு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை ஆராயச் சென்றதாக காங்கிரஸின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களைச் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

“சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீருக்கு வருகை தருமாறு ஆளுநர் அழைப்பு விடுவித்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன். ஆனால் எங்களை விமான நிலையத்தில் இருந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. எங்களுடன் இருந்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை சரியாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.” என இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி தெரிவித்தார்.

’காஷ்மீருக்கு வர வேண்டாம்’

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்ததிலிருந்து அங்கு தொலைத்தொடர்பு சேவைகளும், இணையச் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

“எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்தும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களில் இருந்தும் ஜம்மு காஷ்மீர் மக்களைக் காத்து இயல்புநிலையை திரும்ப கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம்.”

“மூத்த அரசியல் தலைவர்கள் இயல்புநிலை திரும்புவதைத் தடுக்கக் கூடாது , அரசியல் தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ரீநகருக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.” என ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், “அமைதியை நிலைநாட்டுவதற்கும், உயிரிழப்புகள் நேரமால் இருப்பதற்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

ஆனால் இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தர் அபாஸ் நக்வி இது அரசியல் சுற்றுலா என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்படத்தின் காப்புரிமைANI

காஷ்மீருக்கு செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், அங்கு இயல்புநிலை உள்ளது என்றால் ஏன் தலைவர்கள் அங்குச் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது? இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் ஏன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அது குறித்து பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வந்தார் ராகுல் காந்தி, எனவே அங்கு நிலைமை இயல்பாகத்தான் உள்ளது என்றும், காஷ்மீருக்கு வருகைதருமாறும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்தார் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்.

“நான் ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வருமாறு அழைக்கிறேன். அவரின் வருகைக்கு நானே ஏற்பாடு செய்கிறேன். அவர் இங்கு வந்து நிலைமையைப் பார்க்கட்டும்.” என ஆளுநர் தெரிவித்திருந்தார்.

அந்த அழைப்பை உடனடியாக ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அங்கு வருவதாக டிவிட்டரில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button